Type Here to Get Search Results !

Seminary Re-opening Service | கல்வியாண்டின் தொடக்கநாள் திருவிருந்து வழிபாடு | Jesus Sam

தமிழ்நாடு இறையியல் கல்லூரி
அரசரடி, மதுரை-16.
2025-2026

கல்வியாண்டின் தொடக்கநாள் திருவிருந்து வழிபாடு
08.06.2025

செம்பொருள்:
“நிசேயாப் பற்றுறுதியை மறு ஏற்புச் செய்தலும் பற்றுறுதிப் பயணத்தை உறுதி செய்தலும்”

இடம்: கிறித்தரசர் வழிபாட்டுமனை
நேரம்: மாலை 6.00 மணி


TAMILNADU THEOLOGICAL SEMINARY
Arasaradi, Madurai-16.

2025 2026 Academic year

Seminary Re-opening Service
08.06.2025

Theme: "Re-embracing Nicean Creed and Affirming our Faith Journey"

Place: Christ The King Chapel
Time: 6.00p.m.


தமிழ்நாடு இறையியல் கல்லூரி
அரசரடி, மதுரை-16.
கல்வியாண்டின் தொடக்கநாள் திருவிருந்து வழிபாடு
08.06.2025
மாலை 6.00 மணி
1. வழிபாடு தொடக்கம்: (Invocation)
இறைச் சரணம்
ஆதியந்தமில்லாதவரே, ஆனந்த சோதியே,
ஆவிமயமானவரே, அம்மை - அப்பரே
சரணம், சரணம், சரணம்

2. வழிபட அழைப்பு: (Call To Worship)
2025 - 2026 புதிய கல்வி ஆண்டின் தொடக்க வழிபாட்டுக்கு வந்துள்ள தங்களை மூவொரு கடவுளின் திருப்பெயரால் வாழ்த்தி வரவேற்கின்றோம். இந்தக் கல்வியாண்டு முழுவதும் "நிசேயாப் பற்றுறுதியை மறு ஏற்பு செய்தலும் பற்றுறுதிப் பயணத்தை உறுதி செய்தலும்" என்ற தலைப்பின் கீழ் நாம் பல்வேறு நிலைகளில் எண்ணிப்பார்த்து இறையுறவில் இணைந்து பயணமாகவுள்ளோம்.

இந்த வழிபாட்டிலும் அவ்வித எண்ணத்துடன் பங்கேற்கவும் வழிபடவும் ஒவ்வொருவரையும் அழைக்கின்றோம்.

3. தொடக்க இறைவேண்டல்: (Opening Prayer)
கனிவு மிக்கவரும் இரக்கமுள்ளவரும் மிகுந்த பொறுமையுள்ள வரும் அளவில்லாத அன்பு கொண்டவருமான (யோனா 4:2) மூவொரு கடவுளே. இந்த வேளையில் இறையியல் குமுகாயமாக உம் திருமுன் கூடி வருவதற்கு அருள்புரிந்திருப்பதற்காக நன்றி கூறுகின்றோம். பெந்தேகோஸ்தே திருநாளாகிய இந்நாளில் திருச்சபை என்கின்ற பேரியக்கத்தை ஈவாகத் தந்திருப்பதற்காக போற்றுகின்றோம். நம் மீட்பர் இயேசு கிறிஸ்துவின் வழியாக இறைப்பண்புகளை முழுமையாக வெளிப்படுத்தியிருப்பதற்காகவும் நன்றி கூறுகின்றோம். தூயாவியார் வழியாக இறைப்பண்புகளில் நாங்கள் வளர்ந்தோங்க அழைத்தும் ஆற்றுப்படுத்தியும் வருவதற்காக நன்றி கூறுகின்றோம்.  இத் திருவழிபாட்டில் உம் எழுந்தருளளை உணர்ந்து கொள்ளவும். உள்ளார்ந்த மனத்துடன் உம்மைத் தொழுதிடவும் அருள்புரிவீராக எம் மீட்பரும் உம் திருமைந்தருமாகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக மன்றாடுகின்றோம். ஆமென்

4. போற்றிப்பாடல் : (Song of Praise) (ஒளியேற்றல்) கீர்த்தனை: 10
பல்லவி
ஆதி பிதா குமாரன் - ஆவி
திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம்!
திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம்.

அனுபல்லவி
நீத முதற் பொருளாய் நின்றருள் சருவேசன்,
நிதமும் பணிந்தவர்கள் இருதயமலர் வாசன்,
நிறைந்த சத்திய ஞான மனோகர,
உறைந்த நித்திய வேத குணாகர,
நீடு வாரி திரை சூழு மேதினியை
மூடு பாவ இருள் ஓடவே அருள்செய்.
- ஆதி

சரணங்கள்
1. எங்கணும் நிறைந்த நாதர் - பரிசுத்தர்கள்
என்றென்றைக்கும் பணிபாதர்,
துங்கமா மறைப்பிர போதர் - கடைசி நடு
சோதனைசெய் அதி நீதர்,
பங்கில்லான், தாபம் இல்லான், பகர்அடி முடிவில்லான்
பன் ஞானம், சம்பூரணம், பரிசுத்தம், நீதி என்னும்
பண்பதாய் சுயம்பு விவேகன்,
அன்பிரக்கத யாளப்பிரவாகன்
பார்தலத்தில் சிருஷ்டிப்பு, மீட்பு, பரி
பாலனைத்தையும் பண்பாய் நடத்தி, அருள்
- ஆதி

2. நீதியின் செங்கோல் கைக்கொண்டு - நடத்தினால் நாம்
நீணிலத்தில்லாமல் அழிந்து,
தீதுறு நரகில் தள்ளுண்டு - மடிவோ மென்று
தேவ திருவுளம் உணர்ந்து,
பாதகர்க் குயிர் தந்த பாலன் ஏசுவைக் கொண்டு
பரண் எங்கள்மிசை தயை வைத்தனர்; இது நன்று
பகர்ந்த தன்னடி யார்க்குறு சஞ்சலம்,
இடைஞ்சல் வந்த போதே தயவாகையில்
பாரில் நேரிடும் அஞ்ஞான சேதமுதற்
சூரியன் முன் இருள் போலவே சிதறும்.
- ஆதி
                            - காபிரியேல உபதேசியார்

5. பிழை உணர அழைப்பு: (Call to Confession)
மூவொரு கடவுளைப் பற்றிய செய்திகளை இறையியல் குமுகாயமாக விவிலியமறை, விவிலிய மறைக் கோட்பாடுகள் பற்றி இணைந்து கற்கும் முயற்சியில் திரிபுக் கோட்பாடுகளைக் களைவதற்கு வகுத்துக் கொடுத்திருக்கின்ற பற்றுறுதி அறிக்கை களைக் குறித்துப் பாராமுகமாக இருந்த சூழ்நிலைகளை எண்ணி மனம் வருந்தி இந்த நேரத்தில் நாங்கள் அறிக்கையிடுகின்ற எங்கள் குற்றங்களை உணர்ந்து அறிக்கை செய்யவும் தவறுகளில் தொடர்ந்து நிலைத்திடாதிருக்கவும் நம் நிலை உணர்ந்து அறிக்கை செய்வோம் வாருங்கள்.

6. பிழை அறிக்கை: (Confession of Sin)
நடத்துநர்: ஒரே திருமுழுக்கை அறிக்கையிடுகிறோம் என்று அறிக்கை செய்தும், திருமுழுக்கு என்கின்ற திருவருட்சாதனத்தின் உண்மைப் பொருளை உணராமல் உணர்ச்சிகளினால் உந்தப்பெற்று பல்வேறு இடங்களில் திருமுழுக்குகளைப் பெறவும், அதைக் குறித்து கண்டித்து உணர்த்தவும், தவறிய நிலையை எண்ணி மனம் வருந்துகின்றோம்

அவை: எங்கள் பிழைகளை எண்ணி மனம் வருந்திட உதவுவீராக.

நடத்துநர்: மூவொரு கடவுளின் உண்மையை உணராமல் பொருள் திரிந்து பொருள் திருத்தி பற்றுறுதி அறிக்கைகள் குறிப்பாக நிசேயாப் பற்றுறுதி உருவாக்கப்பட்ட நோக்கத்தை உணராமல் பொறுப்பற்றிருக்கும் தன்மையை எண்ணி மனம் வருந்துகின்றோம் எங்கள் பிழைகளை எண்ணி மனம் வருந்திட உதவுவீராக.

அவை: எங்கள் பிழைகளை எண்ணி மனம் வருந்திட உதவுவீராக.

நடத்துநர்: நாங்கள் திருச்சபையாகக் கூடி வருகின்றபொழுது பற்றுறுதி அறிக்கை செய்கின்ற வேளையில் அதனை நாங்கள் அதன் பொருள் உணர்ந்து அறிக்கை செய்யாமல் நினைவாற்றலிலிருந்து பொறுப்பின்றி அறிக்கை செய்கின்ற எண்ணத்தை எண்ணி மனம் வருந்துகின்றோம்.

அவை: எங்கள் பிழைகளை எண்ணி மனம் வருந்திட உதவுவீராக.

நடத்துநர்: நாங்கள் புதிய வழிபாட்டு முறைகள் அமைக்கின்ற போது புதியதாய் பற்றுறுதி அறிக்கைகளை காலத்திற்கேற்ப அடிக்கருத்துக்கள் மாறாமல் எழுத முயல்கின்றோம். பல வேளைகளில் வலிந்து சில கருத்துகளை சூழல் சாராமல் இணைத்து விடுகின்றோம். இந்த நிலையை எண்ணி மனம் வருந்துகின்றோம்.

அவை: எங்கள் பிழைகளை எண்ணி மனம் வருந்திட உதவுவீராக.

(நாம் நம்முடைய தனிப்பட்ட பிழைகளை அறிக்கை செய்வோம்)

7. பிழை மன்னிப்பின் உறுதி: (Absolution)
எம் தலைவரே! நீர் நல்லவர் மன்னிப்பவர் உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர் (தி.பாடல் 86:5) எம்மைக் கண்ணோக்கி எம்மீது இரங்கும் (தி.பாடல் 86:16) என்ற திருமொழிக்கேற்ப நாம் நம் பிழைகளை அறிக்கை செய்யும் போது நம் ஆண்டவர் நமக்கு இரங்கி நம்மை வழுவாது காப்பாராக.

8. திருமறைப் பாடம்: (Scripture Reading)
1. எபிரெயர் (Hebrews) 11:1-10
2. யோவான் (John) 1:1-6

9. அருளுரை: (Sermon)
    அருட்பணி. முனைவர். மார்கிரேட் கலைச்செல்வி
        (முதல்வர், தமிழ்நாடு இறையியல் கல்லூரி)

10. நிசேயாப் பற்றுறுதி அறிக்கை: (Nicean Creed)
விண், மண், காணக்கூடியவை, காண இயலாதவை, ஆகிய எல்லாவற்றையும் படைத்திருக்கிற அனைத்து ஆற்றலும் பொருந்திய பெற்றவராகிய ஒரே கடவுளை நம்புகிறோம்.

ஒரே ஆண்டவராய் கடவுளின் ஒரேபேரான மைந்தராய் இருக்கும் இயேசுகிறிஸ்துவை நம்புகிறோம். அவர் உலகங்கள் உருவாவதற்கு முன்னரே தம் பெற்றவரால் பிறப்பிக்கப் பெற்றார். தெய்வத்தில் தெய்வம் அவர். ஒளியில் ஒளி அவர். மெய்க்கடவுளில் மெய்க்கடவுளவர். உண்டாக்கப் பெற்றவரல்லர் பிறப்பிக்கப் பெற்றவர். பெற்றவராகிய கடவுளின் ஒரே தன்மை கொண்டவர்.

எல்லாவற்றையும் உண்டாக்கினவர். மனிதராகிய நமக்காகவும் நமக்கு மீட்பு உண்டாகவும் விண்ணகத்திலிருந்து இறங்கித் தூய ஆவியாரால் கன்னிமரியாளிடத்தில் உருவாகி மனிதரானார். பொந்தியு பிலாத்துவின் காலத்தில் சிலுவையில் அறையப்பெற்று, துன்புற்று, உயிர் துறந்து, அடக்கம் செய்யப்பெற்றார். மறைச் சொற்கள் கூறியவாறே மூன்றாம் நாள் உயிருற்றெழுந்து விண்ணகம் ஏறி, பெற்றவராகிய கடவுளின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார். வாழ்ந்திருப்போரையும், இறந்தோரையும் நடுத்தீர்க்க மாட்சியுடனே திரும்பவும் வருவார். அவரது ஆட்சிக்கு முடிவு கிடையாது.

ஆண்டவராய் வாழ்வினைத் தருபவராய் பெற்றவராகிய கடவுளிடமும் மைந்தரிடமும் இருந்து புறப்படுகிறவராய், பெற்றவராகிய கடவுளோடும் மைந்தரோடும் தொழுது போற்றப் பெறுபவராய், இறைவாக்கினார் வழியே உரைத்தவராகிய தூய ஆவியாரை நம்புகிறோம். ஒரே, தூய, பொதுவான திருத்தூதுவர் திருச்சபை உண்டென்று நம்புகிறோம். பிழை பொறுத்தருளலுக்கென்று ஏற்படுத்தப்பெற்ற ஒரே திருமுழுக்கை அறிக்கையிடுகிறோம். மரித்தோர் உயிர்பெற்று எழுதலும் மறுமைக்குரிய வாழ்வும் உண்டாகும் என்று காத்திருக்கிறோம். ஆமென்.

11. அறிவிப்புகள்: (Announcements)

12. திருப்பணிக்கொடைப் பாடல்: (Offertory Song)
புத்துயிர் பாடல் 158
பல்லவி
தத்தமாய்த் தந்தேன் என்னையே
நித்தமும் உந்தனின் சேவைக்கே

சரணங்கள்
1. துட்டனாய் அலைந்த பாவி நானே
கட்டளை யாவையும் மீறினேனே
பட்டமா பாடுகள் போதுமென்றே
கிட்டி உம் பாதமே வந்து நின்றே
- தத்தமாய்

2. எந்தனின் உள்ளத்தில் ஆட்சி செய்வீர்
சிந்தின ரத்தத்தால் சுத்தம் செய்வீர்
எந்த இடத்திலும் எந்நேரமும்
உந்தனின் சாட்சியாய் நின்றிடவே
- தத்தமாய்

3. நீர் தந்த வேலையை நித்தமும் நான்
நேர்மையாகச் செய்திட சக்தி ஈவீர்
ஏழ்மையில் ஏங்கிடும் மாந்தருக்கு
தாழ்மையாய்த் தொண்டு நான் செய்திடவே
- தத்தமாய்
- மெ.தா.த.

13. நன்றியும் மன்றாட்டும் (Intercession and Thanks giving)
நன்றி செலுத்துவோம்
"முரண்படு உலகில் அமைதியை ஏற்படுத்துவோர்" என்ற தலைப்பின் கீழ் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் நாம் கற்றுக் கொண்ட இறையியல் செய்திகளுக்காகவும், இந்தப் புதியக் கல்வி ஆண்டில் "நிசேயாப் பற்றுறுதியை மறு ஏற்பு செய்தலும் பற்றுறுதிப் பயணத்தை உறுதி செய்தலும்" இந்த தலைப்பின் கீழ் கற்றுக்கொள்ள போகின்ற புதிய இறையியல் தகவுகளுக்காகவும் மூவொரு கடவுளே உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

நிசேயாப் பற்றுறுதி அறிக்கையைத் திருச்சபைக்கு 1700 ஆண்டுகளுக்கு முன்பு வகுத்தளிப்பதற்கு வழிநடத்திய மூவொரு கடவுளுக்கும் நம் முன்னோர்களுக்காகவும் நன்றி செலுத்துகிறோம்.

திருச்சபையின் பற்றுறுதிப் பயணத்தில் இந்தப் பற்றுறுதி அறிக்கை வழிநடத்தும் திசைகாட்டியாக இருந்து வருவதற் காகவும், உலகத்தினர் மூவொருமைக் கோட்பாட்டை புரிந்து கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ தயக்கம் காட்டுகின்ற சூழலில் அதில் நாம் உறுதியாக நிற்க வழி நடத்தியுள்ள மூவொரு கடவுளுக்கு நன்றி செலுத்துவோம்.

இந்த நாளிலும் புதியக் கல்வியாண்டிலே உம் அழைப்பைப் பெற்றவர்களாகப் பல்வேறு இடங்களிலிருந்து பயணமாகி ஒன்று கூடி வருவதற்கு உதவியுள்ளமைக்காக மூவொரு கடவுளுக்கு நன்றி செலுத்துவோம்.

மன்றாடுவோம்
மூவொருக் கடவுளே! எங்கள் பற்றுறுதிப் பயணத்தில் உம்முடைய மூவொருத் தன்மையைக் குறித்து ஐயம் கொள்ளாமல் எம் நம்பிக்கை இதுவே என்பதில் உறுதியாக நிற்பதற்குரிய தெளிந்த மனத்தை எமக்கு அருளி எங்கள் வாழ்நாளில் மிக உண்மையுடன் மறு ஏற்பு செய்து வாழ்ந்திட உம் அருள் வேண்டி மன்றாடுகின்றோம்.

மூவொரு கடவுளே! நாங்கள் வாழ்கின்ற காலத்தில் உம் மூவொருத் தன்மையின் வழியாக வெளிப்படுத்துகின்ற கூட்டுறவு ஒருங்கமைவு, ஒருமைப்பாடு, ஏற்றத்தாழ்வற்ற நிலை ஆகிய வாழ்வின் உயர் விழுமியங்களை எங்கள் சொல்லிலும், செயலிலும் வெளிப்படுத்த எமக்கருளுமாறு உம் அருள் வேண்டி மன்றாடுகின்றோம்.

மூவொரு கடவுளே! நீர் வகுத்தளித்த சமத்துவ சமுதாயத்திற்கான எத்தகைய ஏற்றத்தாழ்வு மற்ற வாழுமிடமாக இந்த உலகம் அமைந்திட எங்கள் மீட்பர் இயேசு கிறிஸ்துவின் வாழ்வின் வழியாக எடுத்துக் காட்டியுள்ளீர். அவர் வகுத்துத் தந்துள்ள வழித்தடத்தில்

பற்றுறுதியுடன் நாங்கள் பயணமாகிட தூய ஆவியாரின் உறுதுணையையும் எங்களுக்கு உறுதி மொழிந்திருக்கின்றீர். எனவே நாங்கள் ஒளியில் நடப்போராக, தடுமாற்றம் இன்றி எங்கள் வாழ்நாளிலும் தொடர்ந்து நடந்திட உம் அருள் வேண்டி மன்றாடுகின்றோம்.

மூவொரு கடவுளே! இந்த நாளில் நாங்கள் தொடங்கியுள்ள புதியக் கல்வி ஆண்டின் பயணத்தில் உம்மோடு இணைந்து உமக்காக வாழ்ந்து எம் மீது நீர் வைத்திருக்கும் நம்பிக்கை யையும், எதிர்பார்ப்பையும் உறுதியுடன் நிறைவேற்றிட உம் அருள் வேண்டி மன்றாடுகின்றோம்.

இவையனைத்தையும் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் இறைஞ்சுகின்றோம் எங்கள் அன்பின் கடவுளே. ஆமேன்.


14 திருவிருந்து: (Holy Communion)
(ஆற்காடு லுத்தரன் திருச்சபை முறைமை)

குரு: நம் பெற்றோராம் கடவுளிடம் இருந்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உண்டாவதாக.

(திருவிருந்து பெற வந்தோர் முழங்காலில் நிற்க ஒரிரு மணித்துளி அமைதியாய் பிழை அறிக்கை செய்க)

இரக்கமுள்ள கடவுளே, எங்கள் நேர்மையை நம்பி நாங்கள் விருந்தில் சேர எண்ணாமல் உம்முடைய அளவற்ற இரக்கத்தை நம்பிச் சேருகிறோம். உம் திருமேடையின் கீழ் விழும் சிறு துண்டுகளை எடுத்துக்கொள்ள நாங்கள் தகுதியானவர்கள் அல்லர். ஆனாலும் நீர் எப்போழுதும் இரக்கங்கொள்கிற அழகுடைய மாறாத ஆண்டவராய் இருக்கிறீர். ஆகையால் அருள்நிறைந்த கடவுளே, உம் அருமையான மகனாகிய இயேசு கிறிஸ்துவின் விலைமதியாத உடலாலும், செங்குருதியாலும், எங்கள் பாவமுள்ள உடலும், ஆன்மாவும் தூய்மையாகி எப்பொழுதும் நாங்கள் அவருக்குள்ளும் அவர் எங்களுக்குள்ளும் வாழ்வதற்கு ஏற்ற வகையில் அவருடைய உடலை உண்டு. அவருடைய செங்குருதியைப் பருக எங்களுக்கு அருள் செய்யும். ஆமென்.

நான் பாவி தான் ஆனாலும் நீர் மாசற்ற ரத்தம் சிந்தினீர் வா என்று என்னை அழைத்தீர் என் மீட்பரே வந்தேன் நான் பாவி தான் என் நெஞ்சிலே கரை பிடித்து கேட்டேனே என் கறை நீங்க இப்போதே என் மீட்பரே வந்தேன்

பிழை பொறுத்தல் அறிவிப்பு
நீங்கள் முழுமனதோடு உங்கள் மீறுதல்களுக்காக மனம் வருந்தி தூய திருமுழுக்கின் போது இயேசு கிறிஸ்துவை கொண்டு உங்களுக்கு அளிக்கப்பட்ட கடவுளின் அருளை தஞ்சமாக பற்றிக் கொண்டால் திருமறைக் கூற்றுகளுக்கு இசைய நான் இப்போது மூவொரு கடவுளின் திருப்பெயரில் உங்களுடைய எல்லா மீறுதலும் கடவுளின் பேரருளால் பொறுத்தருளப் பெற்றன என்று அறிவிக்கிறேன்.

உங்களில் நற்செயலை தொடங்கியவர் ஆகிய கடவுள் இயேசு கிறிஸ்துவின் நாள் வரை அதை நிறைவாக நடத்துவாராக. அமைதி உங்களோடு இருப்பதாக. ஆமென்.

(தென்னிந்தியத் திருச்சபை முறைமை)
குரு: இதோ உடன்பிறப்புகள் ஒருமித்து வாழ்வது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது. நாம் அனைவரும் ஒரே அப்பத்தில் பங்கு பெறுகிறபடியால். பலரான நாம் ஒரே அப்பமும் ஒரே உடலுமாய் இருக்கிறோம் .
மக்கள்: நான் அவர் கூடாரத்தில் ஆனந்த பலிகளைச் செலுத்திக் கடவுளைப் புகழ்ந்து பாடுவேன்.

நல்லுறவு வாழ்த்து இங்கே கொடுக்கலாம்

தாயும் தந்தையுமாகிய தூய கடவுளே. உம் அருளின்கீழ் இருப்பதற்குப் புதியதும், வாழ்வுமான வழியை உம் அருமையான மகனின் உதிரத்தினால் எங்களுக்கு உண்டுபண்ணினீரே. நாங்கள் தகுதியற்றவர்களாக இருப்பினும் அவர் வழியாக உம்மிடத்தில் வருகிறோம். எங்களையும் இந்தக் காணிக்கைகளையும் உம் திருப்பெயரின் மாட்சிக்கென்று ஏற்றுப் பயன்படுத்தும்படியாக தாழ்மையோடு வேண்டிக்கொள்கிறோம். வானத்திலும், பூமியிலும் உள்ள அனைத்தும் உம்முடையவை. உமது கைகளிலிருந்து வாங்கி உமக்குக் கொடுக்கிறோம். ஆமென்.

அனைவரும் மன்றாடுவோம்
இயேசுவே தகுதியுடைய தலைமைக் குருவே நீர் உம் அடியவர்கள் நடுவில் இருந்தது போலவே எங்கள் நடுவிலும் வந்து, அப்பத்தைப் பிடுகையில் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தியருளும். நீரே பெற்றவரோடும், தூய ஆவியாரோடும், எந்தக் காலமும் ஒரே கடவுளாக வாழ்ந்து அரசாளுகிறீர். - ஆமென்.

குரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

மக்கள்: அவர் உம்மோடும் இருப்பாராக.

குரு : நம் உள்ளத்தை உயர்த்துவோமாக.

மக்கள்: எங்கள் உள்ளத்தை ஆண்டவரிடத்தில் உயர்த்துகிறோம்.

குரு : நம் ஆண்டவராகிய கடவுளுக்கு நன்றி செலுத்தக்கடவோம்.

மக்கள்: அப்படிச் செய்வது தகுதியும் நீதியுமாயிருக்கும்.

திருவிருந்து ஆசிர்வதித்தல்
குரு: ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தாம் காட்டிக் கொடுக்கப்பட்ட அன்று இரவிலே அப்பத்தை எடுத்து (+) நன்றி செலுத்தி அதைப்பிட்டு அடியவர்களுக்குக் கொடுத்து. நீங்கள் வாங்கி உண்ணுங்கள். இது உங்களுக்காக கொடுக்கப்படுகிற என் உடல், என்னை நினைவுகொள்ளும்படி இதனைச் செய்யுங்கள்" என்றார். அப்படியே உடலாகிய உணவை உண்ட பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து (4) நன்றி செலுத்தி, அவர்களுக்குக் கொடுத்து நீங்கள் அனைவரும் இதில் அருந்துங்கள். இது பாவமன்னிப்பு உண்டாகும்படி உங்களுக்காகவும், அனைவருக்காகவும் சிந்தப்படுகிற புதிய உடன்படிக்கைக்குரிய என் செங்குருதி. இதை அருந்தும் போதெல்லாம் என்னை நினைத்துக் கொள்ளும்படி இதைச் செய்யுங்கள்" என்று கூறினார்.

அனைவரும்: ஆமென்.

குரு: நாம் பிடும் அப்பம் கிறித்துவின் உடலின் கூட்டொருமைப் பாடல்லவா?

மக்கள்: உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற இறை ஆட்டுக்குட்டியே எங்களுக்கு இரங்கும்.

உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற இறை ஆட்டுக்குட்டியே எங்களுக்கு இரங்கும்.

உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற இறை ஆட்டுக்குட்டியே உம் நல்லுறவைத் தாரும்.

(திருவிருந்து பகிர்தல்)

முடிவுத் திருப்புகழ்
(தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை முறைமை)
குரு: கர்த்தரை துதியுங்கள் ஏனெனில் அவர நல்லவர். அல்லேலூயா.

அவை: அவர் கிருபை என்றும் உள்ளது. அல்லேலூயா

குரு: பிராத்தனை செய்வோமாக.

(பீடத்தை நோக்கி நின்று பாடுவது)
எல்லாம் வல்ல பராபரனே, உம்முடைய ஒரே குமாரனாயிருக்கிற இயேசுகிறிஸ்துவின் திருச்சரீரமும் திரு இரத்தமுமாகிய இந்த ஆத்தும் ஆகாரத்தினாலே தேவரீர் எங்கள் பாவங்களை மன்னித்ததற்காகவும் ஆன்மப் பசி, தாகத்தைத் தீர்த்ததற்காகவும், உமக்குத் தோத்திரம் செலுத்துகிறோம். இதைக் கொண்டு நாங்கள் தேவரீரைப் பற்றிக்கொள்ளும் உறுதியான விசுவாசமும் பிறரிடம் கொள்ளும் உண்மையான அன்பும் உடையவர்களாய் வாழும்படி செய்தருள வேண்டுமென்று எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை வேண்டிக் கொள்ளுகிறோம், சுவாமி,

அவை: ஆமேன்.

ஆரோனின் ஆசீர்வாதம்
குரு: கர்த்தரானவர் உங்களோடிருப்பாராக.

சபை: அவர் உமதாவியோடும் இருப்பாராக.

குரு: கர்த்தரானவர் உன்னை ஆசீர்வதித்து உன்னைக் காப்பாராக. கர்த்தரானவர் தமது திருமுகத்தை உன்மேல் பிரகாசிக்கச் செய்து, உன்னிடம் கிருபையுள்ளவராயிருப்பாராக. கர்த்தரானவர் தமது திருமுகத்தை உனக்குப் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் (+) தந்தருளுவாராக.

அவை: ஆமேன். ஆமேன், ஆமேன்.

15. நிறைவுப் பாடல்: (Doxology)
புத்துயிர் பாடல் 198
பல்லவி
இறையியல் பயணம் தொடர்வோம் - திரு
மறைவழி நின்றே பயில்வோம்

1. சூழல்கள் தொடுத்திடும் வினாக்கள் - நம்
சிந்தைக்குத் துணைதரும் சவால்கள்
ஏழைகள் எழுப்பிடும் கேள்விகள் - நம்
இறையியல திசைவழி காட்டிகள்
- இறை

2. திருச்சபை வாழ்வினில் இறையியல் - சீர்
திருத்தமே வழங்கிடும் வாழ்வியல்
பொருத்தமாய் பணிதனைப் புரிந்திட - நல்
புதுமைகள் படைத்திடும் இறையியல்
- இறை

3. விடுதலை வாழ்வினை நினைத்தே - நல்
வீரமாய் செயல்படும் இறையியல்
நடுநிலை துறந்தே நலிந்தவர் - தம்
நலனையே நாடிடும் இறையியல்
- இறை
- மெ.தா.த.











கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.