Type Here to Get Search Results !

அடக்க வழிபாட்டு முறை | Funeral Order of Service | Jesus Sam

தமிழ்நாடு இறையியல் கல்லூரி
அரசரடி, மதுரை – 16
அடக்க வழிபாட்டு முறை

நடத்துநர்
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தாயும், தந்தையும் இரக்கம் நிறைந்த கடவுள். அவரே ஆறுதல் அனைத்துக்கும் ஊற்று; அவரைப் போற்றுவோம். கடவுள் எங்களுடைய இன்னல்கள் அனைத்திலும் எங்களுக்கு ஆறுதல் அளிக்கிறார். நாங்களே கடவுளிடமிருந்து ஆறுதல் பெற்றுள்ளதால் பல்வேறு இன்னல்களில் உழலும் மற்ற மக்களுக்கும் ஆறுதல் அளிக்க எங்களால் முடிகிறது. (2 கொரிந்தியர் 1:3,4)

வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. (திருப்பாடல்கள் 16:11)

அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்; மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு. (திருப்பாடல்கள் 30:5)

இயேசு அவரிடம், "உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். (யோவான் 11:25,26)

நான் வாழ்கிறேன்; நீங்களும் வாழ்வீர்கள். (யோவான் 14:19)

காலம் வருகிறது; ஏன், வந்தே விட்டது. அப்போது இறைமகனின் குரலை இறந்தோர் கேட்பர்; அதைக் கேட்போர் வாழ்வர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். (யோவான் 5:25)

திருப்பாடல்கள் 23
(எல்லோரும் சேர்ந்து சொல்லுவது)

கடவுளுக்கும், கிறிஸ்துவுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சிமை உண்டாவதாக.
ஆதியிலும், இப்பொழுதும், எப்பொழுதுமான எல்லா காலத்தும் மாட்சிமை உண்டாவதாக. ஆமென்.

திருமறைப்பாடங்கள்
  • 1 கொரிந்தியர் 15:51-58
  • திருவெளிப்பாடு 7:13-17
  • திருவெளிப்பாடு 21:1-7
  • யோவான் 14:1-3
  • திருவெளிப்பாடு 14:13
  • 1 தெசலோனிக்கேயர் 4:13,14
  • உரோமையர் 8:38,39
  • பிலிப்பியர் 3:20,21
  • திருவெளிப்பாடு 21:4,5
  • திருவெளிப்பாடு 7:16,17
  • 1 கொரிந்தியர் 15:55-57

நினைவேந்தல் உரைகள்

அருளுரை


ஆண்டவர் உங்களோடிருப்பாராக:
அவர் உம்மோடும் இருப்பாராக.

இறைவேண்டல் செய்வோம்
ஆண்டவரே, எங்களுக்கு இரங்கும்
கிறிஸ்துவே, எங்களுக்கு இரங்கும்
ஆண்டவரே, எங்களுக்கு இரங்கும்

விண்ணுலகிலிருக்கிற எங்கள் தாயும் தந்தையுமாகிய கடவுளே உமது திருப்பெயர் தூயதெனப் போற்றப் பெறுக உமது ஆட்சி வருக உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல மண்ணுலகிலும் நிறைவேறுக. இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும். நாங்கள் சோதனைக்குட்படும்போது தீயோனிடமிருந்து எங்களை விடுவியும். ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே. ஆமென்.

இறந்துபோன நம் சகோதரரைக் கடவுளிடத்தில் ஒப்புவிப்போமாக.
நீதியரின் ஆத்துமாக்கள் கடவுளின் கைகளில் இருக்கின்றன:
எந்தத் தீங்கும் அவர்களை அணுகுவதில்லை. (ஞானம் 3:1)

இறைவேண்டல் செய்வோம்
எல்லாம் வல்ல கடவுளே, ஆண்டவருக்குள் இறந்த பற்றுறுதியாளரின் ஆத்துமாக்கள் உம்மோடு தங்கி அக்களிப்பில் மகிழ்ச்சியடைந்து வாழுகின்றன. இந்தச் சகோதரர் ஆறுதலையும், இளைப்பாறுதலையும் கண்டடையச் செய்வீர் என்ற உறுதியுடன் இவருடைய ஆவியை உம்மிடத்தில் ஒப்புவிக்கிறோம். நடுத்தீர்ப்பின் நாளில் இவரோடும், இம்மையை விட்டுக் கடந்து போயிருக்கும் உம் பிள்ளைகள் அனைவரோடுங்கூட நாங்களும் உம் உறுதிமொழிகளை முழுமையாய்ப் பெற்று நிறைவடைந்திட அருள் செய்யவேண்டுமென்று எங்கள் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் மாட்சிமை மிகுந்த உயிர்த்தெழுதலை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

துயரப்படுகிறவர்களுக்காக மன்றாடுவோம்
துயரப்படுகிறவர்கள் பேறுபெற்றோர்:
அவர்கள் ஆறுதலடைவர். (மத்தேயு 5:4)

மன்றாடுவோம்
இரக்கங்களின் கடவுளே! எல்லா ஆறுதலையும் அருளுகிற கடவுளே, துயரப்படுகிற உமது அடியார்களை இரக்கத்துடனும், அன்புடனும் கண்ணோக்கியருள வேண்டிக்கொள்ளுகிறோம். ஆண்டவரே அவர்களுக்கு அடைக்கலமும், பலமும், உதவிசெய்யும் துணையுமாய் இருப்பீராக. அறிவுக்கு எட்டாத கிறிஸ்துவின் அன்பைப் புரிந்து கொள்ள அவர்களுக்கு உதவி செய்யும். தமது இறப்பினாலே சாவைவென்று, தமது உயிர்த்தெழுதலினாலே மெய் வாழ்வின் வாயிலைத் திறந்த எங்கள் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் மூலம் வேண்டிக் கொள்ளுகிறோம். ஆமென்.

பற்றுறுதிக்காகவும், நம்பிக்கைக்காகவும் வேண்டுதல் செய்வோம்
வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று: நாங்கள் இன்னும் நம்புகின்றோம் (திருப்பாடல்கள் 27:13)

மன்றாடுவோம்
விண்ணகக் கடவுளே! உண்மையான பற்றுறுதியையும், உறுதியான நம்பிக்கையையும் உம் மைந்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் எங்களுக்கு அருளிச்செய்திருக்கிறீரே, தூயோரின் கூட்டுறவும், பிழை பொறுத்தருளலும், மெய் வாழ்வுக்கான உயிர்தெழுதலும், உண்டென்று நம்புகிறவர்களைப்போல நாங்கள் நடந்துகொள்ள எங்களுக்கு உதவி செய்யும். இந்தப் பற்றுறுதியையும், நம்பிக்கையையும் எங்கள் வாழ்நாள் முழுவதும் எங்களுக்குள் பலப்படுத்தியருளவேண்டுமென்று உம் மைந்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

இப்பொழுதும் உண்மையும், உறுதியுமான நம்பிக்கையினால் நமது பற்றுறுதியை அறிக்கை செய்வோமாக:
விண்ணையும் மண்ணையும் படைத்த அனைத்து ஆற்றலும் பொருந்திய தாயும் தந்தையுமாகிய கடவுளை நம்புகிறோம்.

அவர்தம் ஒரே மைந்தராகிய நம் தலைவர் இயேசு கிறிஸ்துவையும் நம்புகிறோம். அவர் தூய ஆவியாராலே கன்னி மரியாவிடம் கருக்கொண்டு பிறந்தார். பொந்தியு பிலாத்துவின் காலத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையப்பெற்று இறந்து அடக்கம் செய்யப்பெற்றுப் பாதாளம் இறங்கினார். மூன்றாம்நாள் இறந்தோரிடையே இருந்து எழுந்தருளினார். விண்ணகம் ஏறி அனைத்து ஆற்றலும் பொருந்திய பெற்றவராம் கடவுளின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து உயிர் உள்ளவரையும் இறந்துவிட்டோரையும் நடுத்தீர்க்க வருவார்.

தூய ஆவியாரையும் நம்புகிறோம் பொதுவாக இருக்கிற தூய திருச்சபையும் தூயோரின் கூட்டுறவும் பிழைபொறுப்பும் உடல் உயிர்ப்பும் மெய்வாழ்வும் உண்டென்று நம்புகிறோம். ஆமென்.

பாடல்
உம்மில் ஆறுதல் காண உம்மை அண்டியாம்
வாழ எம்மை உடையோர் நீர் இருக்க யாரும்
இல்லென்று சொல்லாதிருக்க
நாதா நம்பிக்கை தா தாதா தஞ்சம் நீ தான்

1. மாந்தர் தமில் கலகங்கள் பல
நாட்டில் மாபெரும் சிதைவுகள்
யுத்தங்கள் பட்டினி பூகம்பங்கள் மூலம்
உள்ளம் நடுங்கிடுதே - நாதா

2. ஆருமில்லை துணை என்றேங்கியே
நாங்கள் சோரும் எவ்வேளையிலும்
'கூட இருப்பேன் அனாதையாக விடேன்'
கூறினாய் மன்னவனே. -நாதா

3. உயிர்தரும் திருவசனம் எம்முள்ளில்
உறுதியாய் நிலைக்க உயர்நிலை வாழ்வு
உண்டென்று கூறிய உம் வாக்கை நினைத்திட - நாதா

இறையாசி:
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும், கடவுளின் அன்பும், தூய ஆவியாரின் கூட்டுறவும் நம் அனைவரோடுமிருப்பனவாக.  ஆமென்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.