Type Here to Get Search Results !

CSI முதலாம் வழிபாட்டு முறைமை | South Indian Church First Liturgy | Jesus Sam

தென்னிந்தியத் திருச்சபை
முதலாம் வழிபாட்டு முறைமை


வாழ்த்தும் வரவேற்பும் [Greetings]
பெற்றவர், மைந்தர், தூய ஆவியாரின் திருப்பெயராலே. ஆமென்.
இந்த நாளின் மரபு வழிபாட்டிற்கு வருகை தந்துள்ள உங்கள் அனைவரையும் மூவொரு கடவுளின் திருப்பெயராலே அன்போடு வாழ்த்தி வரவேற்கிறேன்.
I greet and welcome you all for this traditional service in the name of our Triune God.

இறைவேண்டல் செய்வோம்
(Let us Pray)
எங்கள் தாயும் தந்தையுமாகிய கடவுளே, நீர் தந்த இந்த புதிய நாளுக்காக, புதிய நாளின் காலைப் பொழுதிற்காக உமக்கு நன்றி படைக்கிறோம்.  சென்று போன நாட்கள் முழுவதும் கண்ணின் மணி போல் எங்களைக் பாதுகாத்து, இந்த புதிய நாளைக் காணச் செய்த உம்முடைய தயவுக்காக நன்றி படைக்கிறோம்.  இந்த நேரத்திலும், உமது பாதத்தில் அமர்ந்து, உம்மை வழிபட நீர் தந்த வாய்ப்பிற்காய் உமக்கு நன்றி படைக்கிறோம்.  சகோதரர் ஒன்றுபட்டு வாழ்வது எத்துணை நன்று, எத்துணை இனியது! என்ற திருமொழிக்கிணங்க, சகோதரத்துவ ஐக்கியத்தோடு, உம்மை நோக்கிப் பார்க்க நீர் கொடுத்த வாய்ப்பிற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். இந்த வழிபாட்டின் தொடக்கம் முதல் நிறைவு மட்டுமாய் உம்முடைய இருத்தல் நிலையை நாங்கள் உணர்ந்து கொள்ள அருள் தாரும்.  இவை எல்லாவற்றையும் இறைமகன் இயேசு கிறிஸ்துவின் வழியாய் இறஞ்சுகிறோம் எங்கள் பெற்றவராம் கடவுளே. ஆமென். 

தொடக்கப் பாடல் (Opening Song)
(கடவுளை போற்றுவதற்கு உதவியாக கிறிஸ்து சபை பாமாலைகளில் 267--வது பாமாலை, போற்றும் போற்றும் புண்ணிய நாதரைப் போற்றும் என்ற பாடலை நாம் யாவரும் எழுந்து நின்று பாடுவோம்)

1. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!
வானோர் கூடிப் பாடவும் இன்பமாய்,
பாரிலேயும் நாம சங்கீர்த்தனம் செய்ய;
மாந்தர் யாரும், வாரும் ஆனந்தமாய்.
நேச மேய்ப்பன் கரத்தில் ஏந்துமாறு
இயேசு நாதர் நம்மையும் தாங்குவார்;
போற்றும், போற்றும்! தெய்வ குமாரனைப் போற்றும்!
பாதுகாத்து நித்தமும் போஷிப்பார்.

2. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!
பாவம் போக்கப் பாரினில் ஜென்மித்தார்;
பாடுபட்டுப் பிராணத் தியாகமும் செய்து
வானலோக வாசலைத் திறந்தார்.
மா கர்த்தாவே, ஸ்தோத்திரம் என்றும் என்றும்!
வாழ்க, வாழ்க, ஜெகத்து ரட்சகா!
அருள் நாதா, மாசணுகா பரஞ்சோதி,
வல்லநாதா, கருணை நாயகா!

3. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!
விண்ணும் மண்ணும் இசைந்து பாடவும்;
போற்றும், போற்றும், மீட்பர் மகத்துவமாக
ஆட்சிசெய்வார் நித்திய காலமும்;
ஏக ராஜா, மாட்சிமையோடு வந்து,
இயேசு ஸ்வாமி, பூமியில் ஆளுமேன்;
லோகம் எங்கும் நீதியின் செங்கோலை ஓச்சி
ஜோதியாகப் பாலனம் பண்ணுமேன்.

(தொடர்ந்து நாம் நின்றவாறே, வழிபடுவோம் வாரீர் நூலில் 60-ம் பக்கத்தில் உள்ள தென்னிந்திய திருச்சபையின் முதலாம் வழிபாட்டு முறையை பின்பற்றுவோம்)
நடத்துனர்: அனைவர் தம் உள்ளங்களையும் அனைவர் தம் விருப்பங்களையும் அனைத்து மறை பொருள்களையும் அறிந்துள்ள அனைத்து ஆற்றலும் பொருந்திய கடவுளே நாங்கள் உம்மிடத்தில் முழுமனத்துடன் அன்புகூரவும் உம் தூய திருப்பெயரை உண்மையுடன் மாட்சியுறச் செய்யவும் உம் தூய ஆவியாரின் ஏவுதலால் எங்கள் மனத்தின் எண்ணங்களைத் தூய்மை செய்தருள்க என்று எங்கள் மீட்பர் கிறிஸ்துவின் வழியாக வேண்டிக் கொள்கிறோம்.

அவை: உயர்விடத்தில் இருக்கும் கடவுளுக்கு மாட்சியும் மண்ணுலகில் அமைதி மானிடர் மீது அன்பும் உண்டாகுக. ஆண்டவராகிய இறைவா நிலைபேருடைய மன்னரே அனைத்தாற்றலும் பொருந்திய பெற்றவரான கடவுளே உம்மைப் போற்றுகிறோம் உம்மைப் புகழுகிறோம் உம்மை வணங்குகிறோம் உம்மை மாட்சியுறச் செய்கிறோம். உம் சிறந்த மாட்சியின் பொருட்டு, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

ஆண்டவராகிய ஒரே பேறான மைந்தர் இயேசுகிறிஸ்துவே. ஆண்டவரே தாயும் தந்தையுமாகிய கடவுளின் மைந்தரே மண்ணுலகின் மீறுதல்களைச் சுமந்து தீர்க்கிற இறைமறியே எங்களுக்கு இரங்கும் மண்ணுலகில் மீறுதல்களைச் சுமந்து தீர்க்கிறவரே எங்கள் மன்றாட்டை ஏற்றுக் கொள்ளும் பெற்றவராகிய கடவுளின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே எங்களுக்கு இரங்கும்.

இயேசு கிறிஸ்துவே நீரே தூயவர் நீரே ஆண்டவர் நீர் ஒருவரே ஆவியாரோடே கடவுளின் மாட்சியில் உயரியவராய் இருக்கிறீர். ஆமென்.

முறைமுறையாகச் சொல்லுதல்
நடத்துனர்: கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி வல்லமையும் செல்வமும் அறிவும் மாண்பும் பெருமையும் புகழ்ச்சியும் பெறத் தகுதி பெற்றது.

அவை: ஆட்டுக் குட்டியாருக்கு மாட்சி உண்டாகுக.

நடத்துனர்: அரியணையில் வீற்றிருந்தவருக்கும் ஆட்டுக் குட்டியாருக்குப் புகழ்ச்சியும் மாண்பும் பெருமையும் ஆற்றலும் என்றென்றும் உரியன.

அவை: ஆட்டுக்குட்டியாருக்கு மாட்சி உண்டாகுக.

நடத்துனர்: ஆண்டவரே நீரே தகுதி பெற்றவர். நீர் கொல்லப்பட்டீர். உமது உதிரத்தினால் குலம், மொழி, நாடு, மக்களினம் ஆகிய அனைத்தினின்றும் மக்களைக் கடவுளுக்கென்று விலை கொடுத்து மீட்டுக்கொண்டீர்.

அவை: அரியணையில் வீற்றிருக்கும் எங்கள் கடவுளிடமிருந்தும் ஆட்டுக்குட்டியாரிடம் இருந்துமே மீட்பு வருகிறது. ஆமென். புகழ்ச்சியும் பெருமையும் அறிவும் நன்றியும் மாண்பும் ஆற்றலும் வலிமையும் எங்கள் கடவுளுக்கே என்றென்றும் உரியன. ஆமென்.

பிழை உணர அழைப்பு [Call to Realise Our Sins]
(Let us Realise our Sins)
நடத்துனர்: அன்புக்குரியோரே, நாம் இப்போது கடவுளின் மாதூய சொற்களைக் கேட்க இங்கே கூடி வந்துள்ளோம். உண்மையான வருத்தத்தோடும் பற்றுறுதியோடும் அவரிடம் நெருங்கிச் சேர்த்திட கடவுளின் அருளை நாடி முழுங்கால் படியிட்டு அமைதியாக நாம் நம்மை ஆய்ந்து அறிவோம் வாருங்கள்.

(சற்றுநேரம் அமைதி: பின் நடத்துநர் மொழிவது)

உங்கள்/நம்முடைய மீறுதல்களுக்காக முழு மனத்துடன் உண்மையாக மனம் வருந்தி பிறரிடத்தில் அன்புடனும் நட்புடனும் வாழ்வோம் என்றும், இனிக் கடவுளின் திருமுறைமைகளைக் கைக்கொண்டு புதிதாக்கப் பெற்றோராய் அவருடைய தூய வழியில் நடப்போம் என்றும் முடிவெடுத்துள்ள நாம்/நீங்கள் நம்மீட்பர் இயேசு கிறிஸ்துவின் வழியாக அனைத்து ஆற்றலும் பொருந்திய கடவுளுடன் ஒப்புறவாகும்படி, மறுபடியும் நம்முடைய/உங்கள் மீறுதல்களை மனத்தாழ்மையாக அறிக்கை செய்யுங்கள்.

பிழை பொறுத்தருளலுக்குரிய அறிக்கை [Confession of Sins]
(நாம் ஆண்டவருக்கு விரோதமாய் செயல்பட்டு, நம்முடைய சிந்தனைகளினாலும், செயல்களினாலும், கடவுளை காயப்படுத்தின பிழைகளை உணர்ந்தவர்களாக பின்வரும் பிழை பொறுத்தருளலுக்குரிய அறிக்கையை சேர்ந்து ஏறெடுப்போம்)
(Let us Confess our Sins)
எங்கள் பெற்றவராகிய கடவுளே உமக்கு எதிராகவும் எங்கள் அயலாருக்கு எதிராகவும் குற்றமிழைத்தோம் என்று அறிக்கை இடுகிறோம். ஒளியில் நாங்கள் நடக்கவில்லை. இருளிலேதான் நடந்திருக்கிறோம். கிறிஸ்துவின் பெயரைச் சொல்லியும் நாங்கள் தீமையை விட்டு விலகவேயில்லை. எங்களுக்கு இரங்குவீராக என்று மன்றாடுகிறோம். இயேசு கிறிஸ்துவின் பொருட்டு எங்கள் மீறுதல்கள் எல்லாவற்றையும் பொறுத்தருள்வீராக. உம் தூய ஆவியார் வழி எங்களைத் தூய்மைப்படுத்தும். எங்கள் மனச்சான்று உயிர்பெறச் செய்யும். உம் திருப்பெயருக்கு மாட்சிஉண்டாக நாங்கள் இனிப் புது வாழ்வுள்ளோராக உமக்கு ஊழியம் செய்யத் தகுந்தவாறு பிறர் பிழை நாங்கள் பொறுத்திட எங்களுக்கு உதவி செய்வீராக. ஆமென்.

ஆயர் எழுந்து நின்று சொல்லுவது

"பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே எல்லாரும் என்னிடம் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்". மத்தேயு 11:28

தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார். யோவான் 3:16

பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு இவ்வுலகத்திற்கு வந்தார் இக்கூற்று உண்மையானது எல்லாராலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது. 1 தீமோத்தேயு 1:15

ஒருவர் பாவம் செய்ய நேர்ந்தால் தந்தையிடம் பரிந்துபேசுகிற ஒருவர் நமக்கு இருக்கிறார். அவரே மாசற்ற இயேசு கிறிஸ்து. நம் பாவங்களுக்குக் கழுவாய் அவரே; நம் பாவங்களுக்கு மட்டும் அல்ல; அனைத்துலகின் பாவங்களுக்கும் கழுவாய் அவரே.

சற்றுநேர அமைதிக்குப்பின் ஆயர் உரைப்பது

நம் பெற்றவராகிய அனைத்து ஆற்றலும் பொருந்திய கடவுள் உண்மையான வருத்தத்துடனும் மெய்யான பற்றுறுதியுடனும் தம்மிடம் மனம் திரும்பி, தங்கள் உடன் வாழ் மக்களின் குற்றங்களைப் பொறுத்தருள்கிற எவருக்கும் பிழை பொறுத்து அருளலைப் பேரிரக்கத்துடன் உறுதி மொழிந்துள்ளார். அவர் நம் மீட்பர் கிறிஸ்துவின் பொருட்டு நமக்கு இறங்கி, நம் அனைத்து மீறுதல்களையும் பொறுத்தருளி, அவற்றிலிருந்து நம்மை/உங்களை விடுதலையாக்கி எல்லா நன்மைகளுக்குள்ளும் நம்மை/உங்களை உறுதிப் படுத்தி நிலைநிறுத்தி மெய்வாழ்வின் கரையில் சேர்ப்பாராக.

அவை: ஆமென். இறைவா உமக்கே போற்றி உரித்தாகுக.

நடத்துனர்: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

அவை: அவர் உம்மோடும் இருப்பாராக.
(யாவரும் அமர்ந்திருந்து திருமறைப் பாடம் படிக்கக் கேட்போம்)

திருமறைப்பகுதி
i) இந்த மரபு வழிபாட்டிற்கென்று படிக்கும்படியாக கொடுக்கப்பட்ட திருமறைப் பகுதி ஓசேயா இறைவாக்கினர் நூல் 5-ம் பிரிவு 13-ம் திருமொழி முதல் 6-ம் பிரிவு 11-ம் திருமொழி முடிய.
ஓசேயா 5-ம் பிரிவு 13-ம் திருமொழி முதல் 6-ம் பிரிவு 11-ம் திருமொழி முடிய
ii) The given text for today is From the Book of Hosea Chapter 5 Verse 13 to Chapter 6 Verse 11.
வேற்று நாட்டுடன் செய்த மதியீனமான உடன்படிக்கை
13. எப்ராயிம் தன் பிணியைக் கண்டுகொண்டான்; யூதா தன் காயத்தை உணர்ந்து கொண்டான்; எப்ராயிம் அசீரியாவில் புகலிடம் தேடி, யாரேபு அரசனுக்கு ஆளனுப்பினான். ஆனால், உங்களைக் குணமாக்கவோ, உங்கள் காயங்களை ஆற்றவோ அவனால் இயலாது.
14. ஏனெனில், நான் எப்ராயிமுக்குச் சிங்கத்தைப் போலவும், யூதாவின் வீட்டாருக்குச் சிங்கக்குட்டியைப்போலவும் இருப்பேன்; நான், நானே அவர்களைக் கவ்விப் பிடிப்பேன்; தூக்கிக்கொண்டு போவேன்; விடுவிப்பவன் எவனுமே இரான்.
15. தங்கள் குற்றத்திற்கான பழியை ஏற்று, என்னைத் தேடி வரும்வரை, நான் என் இடத்திற்குத் திரும்பிப் போய்விடுவேன். தங்கள் துன்பத்திலே அவர்கள் என்னைத் தேடுவார்கள்.
1. “வாருங்கள், ஆண்டவரிடம் நாம் திரும்புவோம்; நம்மைக் காயப்படுத்தியவர் அவரே, அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்து நொறுக்கியவர் அவரே, அவரே நம் காயங்களைக் கட்டுவார்.
2. இரண்டு நாளுக்குப் பிறகு நமக்குப் புத்துயிர் அளிப்பார்; மூன்றாம் நாளில் நம்மை எழுப்பி விடுவார்; அப்பொழுது நாம் அவர் முன்னிலையில் வாழ்ந்திடுவோம்.
3. நாம் அறிவடைவோமாக, ஆண்டவரைப்பற்றி அறிய முனைந்திடுவோமாக; அவருடைய புறப்பாடு புலரும் பொழுதுபோல் திண்ணமானது; மழைபோலவும், நிலத்தை நனைக்கும் இளவேனிற்கால மாரிபோலவும் அவர் நம்மிடம் வருவார்” என்கிறார்கள்.
4. எப்ராயிமே! உன்னை நான் என்ன செய்வேன்? யூதாவே! உன்னை நான் என்ன செய்வேன்? உங்கள் அன்பு காலைநேர மேகம் போலவும் கதிரவனைக் கண்ட பனிபோலவும் மறைந்துபோகிறதே!
5. அதனால்தான் நான் இறைவாக்கினர் வழியாக அவர்களை வெட்டி வீழ்த்தினேன்; என் வாய்மொழிகளால் அவர்களைக் கொன்று விட்டேன்; எனது தண்டனைத் தீர்ப்பு ஒளிபோல வெளிப்படுகின்றது.
6. உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன்; எரிபலிகளைவிட, கடவுளை அறியும் அறிவையே நான் விரும்புகின்றேன்.
7. அவர்களோ ஆதாம் என்ற இடத்தில் உடன்படிக்கையை மீறினார்கள்; அங்கே எனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தார்கள்.
8. கிலயாது கொடியோர் நிறைந்த நகர்; அதில் இரத்தக்கறை படிந்துள்ளது.
9. கொள்ளையர் கூட்டம் வழிப்போக்கருக்காகக் காத்திருப்பது போல் குருக்களின் கூட்டம் செக்கேமுக்குப் போகிற வழியில் காத்திருந்து கொலை செய்கின்றது; கொடுமையன்றோ அவர்கள் செய்வது!
10. இஸ்ரயேல் குடும்பத்தாரிடம் மிகக் கொடிய செயலொன்றை நான் கண்டேன்; அங்கே எப்ராயிமின் வேசித்தனம் இருந்தது, இஸ்ரயேல் தீட்டுப்பட்டிருந்தது.
11. யூதாவே! உனக்கும் அறுவடைக்காலம் ஒன்று குறிக்கப்பட்டிருக்கின்றது. நான் என் மக்களை நன்னிலைக்குத் திரும்பக் கொணரும் போது,
(படிக்கும்படியாக கொடுக்கப்பட்ட திருமறைப்பாடம் படித்து முடிந்தாயிற்று.  கடவுளுக்கே மாட்சி உரித்தாகுக)
பாடல் (Song)
(அருளுரைக்கு ஆயத்தமாக கண்களை மூடி ஆண்டவரை நோக்கிப் பார்ப்போம்)
ஒன்றுமில்லை நான் ஐயா
உம்மாலன்றி ஒன்றும் செய்யேன்
அன்று சீஷர்க்களுக்களித்த ஆவியால்
இன்றே அடியேனை நிரப்பும்

தந்தேன் என்னை இயேசுவே
இந்த நேரமே உமக்கே

அருளுரை (Sermon)
இறை வேண்டல்
என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே! என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்; இங்கே கூடியிருக்கும் அனைவரின் எண்ணங்களும் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும்.  அர்ப்பணும், நீசனுமான பயனற்ற பணியாளன் நான், அடியேனை தற்பரன் எடுத்து பயன்படுத்தும், எங்களோடு நீர் பேசும், மீட்பர் பாதம் பணிந்து கெஞ்சுகிறோம், நல்ல கடவுளே. ஆமென்.


நிசேயாப் பற்றுறுதியறிக்கை
(அருளுரையைக் கேட்ட நாம், அனைவரும் எழுந்து நின்று நம்முடைய பற்றுறுதியை நிசேயாப் பற்றுறுதி அறிக்கையின் மூலமாக உறுதிப்படுத்துக்கொள்ளுவோம்)
விண், மண், காணக்கூடியவை, காண இயலாதவை. ஆகிய எல்லாவற்றையும் படைத்திருக்கிற அனைத்து ஆற்றலும் பொருந்திய பெற்றவராகிய ஒரே கடவுளை நம்புகிறோம்.

ஒரே ஆண்டவராய் கடவுளின் ஒரேபேரான மைந்தராய் இருக்கும் இயேசுகிறிஸ்துவை நம்புகிறோம். அவர் உலகங்கள் உருவாவதற்கு முன்னரே தம் பெற்றவரால் பிறப்பிக்கப்பெற்றார். தெய்வத்தில் தெய்வம் அவர். ஒளியில் ஒளி அவர். மெய்க்கடவுளில் மெய்க்கடவுளவர். உண்டாக்கப் பெற்றவரல்லர் பிறப்பிக்கப் பெற்றவர். பெற்றவராகிய கடவுளின் ஒரே தன்மை கொண்டவர். எல்லாவற்றையும் உண்டாக்கினவர். மனிதராகிய நமக்காகவும் நமக்கு மீட்பு உண்டாகவும் விண்ணகத்திலிருந்து இறங்கித் தூய ஆவியாரால் கன்னிமரியாவிடத்தில் உருவாகி மனிதரானார். பொந்தியு பிலாத்துவின் காலத்தில் சிலுவையில் அறையப்பெற்று. துன்புற்று, உயிர் துறந்து, அடக்கம் செய்யப்பெற்றார். மறைச் சொற்கள் கூறியவாறே மூன்றாம் நாள் உயிருற்றெழுந்து விண்ணகம் ஏறி. பெற்றவராகிய கடவுளின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார். வாழ்ந்திருப்போரையும் இறந்தோரையும் நடுத்தீர்க்க மாட்சியுடனே திரும்பவும் வருவார். அவரது ஆட்சிக்கு முடிவு கிடையாது.

ஆண்டவராய் வாழ்வினைத் தருபவராய் பெற்றவராகிய கடவுளிடமும் மைந்தரிடமும் இருந்து புறப்படுகிறவராய். பெற்றவராகிய கடவுளோடும் மைந்தரோடும் தொழுது போற்றப் பெறுபவராய், இறைவாக்கினர் வழியே உரைத்தவராகிய தூய ஆவியாரை நம்புகிறோம். ஒரே, தூய, பொதுவான திருத்தூதுவர் திருச்சபை உண்டென்று நம்புகிறோம். பிழை பொறுத்தருளலுக்கு என்று ஏற்படுத்தப்பெற்ற ஒரே திருமுழுக்கை அறிக்கையிடுகிறோம். மரித்தோர் உயிர்பெற்று எழுதலும் மறுமைக்குரிய வாழ்வும் உண்டாகும் என்று காத்திருக்கிறோம். ஆமென்.

திருப்பணிக்கொடைப் பாடல்

அறிவிப்புகள்

நன்றியும் மன்றாட்டும்
(நாம் அமர்ந்திருந்து நன்றியையும், மன்றாட்டையும் ஏறெடுப்போம்)
நன்றி இறைவேண்டல்:
1) 
2) 

மன்றாடுவோம்:
(தொடர்ந்து மன்றாடுவோம்)

ஆண்டவர் கற்பித்த மன்றாட்டு
(நன்றியையும், மன்றாட்டையும் ஒன்று திரட்டி ஆண்டவர் இயேசு கிறிஸ்து கற்பித்த மன்றாட்டை இணைந்து ஏறெடுப்போம்)
(Let us say our Lord's Prayer)
விண்ணுலகிலிருக்கிற எங்கள் பெற்றவராகிய கடவுளே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக. உமது ஆட்சி வருக உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல் மண்ணுலகிலும் நிறைவேறுக. இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளது போல எங்கள் குற்றங்களை மன்னியும். நாங்கள் சோதனைக்குட்படும் போது, தீயோனிடமிருந்து எங்களை விடுவியும். ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே. ஆமென்.

நிறைவு ஒப்படைப்பு மன்றாட்டு
அனைத்து ஆற்றலும் பொருந்திய நிலைபேறுடைய கடவுளே, திருச்சபையின் முழுஉடலையும் உம் ஆவியார் வழியாகத் தூய்மைப் படுத்துகிறவரே உம் திருச்சபையில் எல்லா நிலையிலும் உள்ள மனிதருக்காகவும் நாங்கள் உம் திருமுன்னிலையில் ஏறெடுக்கும் விண்ணப்பங்களையும் மன்றாட்டுகளையும் ஏற்று உறுப்பினர் ஒவ்வொருவரும் தம்தம் அழைப்பிலும் பணிவிடையிலும் உண்மையோடும் இறைப்பற்றோடும் உமக்கு ஊழியம் செய்ய அருள்புரிய வேண்டுமென்று எங்கள் ஆண்டவரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக வேண்டிக் கொள்ளுகிறோம். ஆமென்.

இறைவாழ்த்து [Benediction]
(இறை வாழ்த்து பெற்றுக்கொள்வோம்)
(Let us resive the Benediction)
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும், கடவுளின் அன்பும், தூய ஆவியாரின் இணையறாத கூட்டுறவும், உங்கள் அனைவரோடும் கூட எப்போதும் இருப்பனவாக. ஆமென்.

நிறைவுப்பாடல்
(வழிபாட்டின் நிறைவுப் பாடலாக கிறிஸ்து கீர்த்தனைகளில் 320-வது கீர்த்தனை, மங்களம் சதா ஜெய மங்களம் வேதா என்ற பாடலை நாம் யாவரும் எழுந்து நின்று பாடுவோம்)

மங்களம் சதா ஜெய – மங்களம் வேதா
எங்கள் துங்கமங்களர்க்கு – மங்களம் சதா

1. அணைத்துக்காத்தவா – உல – கனைத்தும் படைத்தவா
இணையில்லா பிதாவுமக்கு மங்களம் சதா

2. யேசுநாயாகா – எம் – நேசநாயகா
மாசில்லாத சுதனுமக்கு மங்களம் சதா

3. ஞானவாரியே – திரு – வானமாரியே
ஆனந்தசுத்தாவியுமக்கு மங்களம் சதா

(நன்றி அரிதலான இருதயத்தோடு அனைவரும் இணைந்து சொல்லுவோம்)
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! (திருப்பாடல்கள் 103:1,2)

நடத்துனர்: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

சபை: அவர் உம்மோடும் இருப்பாராக.

நடத்துனர்: இறை அமைதியோடே சென்று வாருங்கள். 

சபை: கடவுளின் திருப்பெயராலே. ஆமென்.

இந்த நாளின் மரபு வழிபாட்டிற்காக இறை வேண்டல் செய்த, உழைத்த, ஆலோசனைகள் வழங்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். 
குறிப்பாக பாடகர் குழுவினருக்கு நன்றி சொல்லுகிறேன்.

இந்த நாள் இனிய நாளாய் அமைய வாழ்த்துகள்!

GOD BLESS YOU ALL!!

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.