Type Here to Get Search Results !

ONTOLOGY | Theological English | Assignment | Jesus Sam

Theological English (Assignment)
Topic: ONTOLOGY
உள்ளடக்கம்:
1. முன்னுரை
2. மனிதன் ஏன் கடவுளின் இருத்தல் நிலையை ஆதரித்தான்?
3. மனிதன் ஏன் கடவுளின் இருத்தல் நிலையை ஆதரிக்க மறுத்தான்?
4. விவிலியத்தில் கடவுளின் இருத்தல் நிலை
5. விவிலியத்தில் கடவுளின் இருத்தல் நிலையை மறுக்கும் மனிதர்கள்
6. கடவுளின் இருத்தல் நிலை பற்றிய தத்துவ ஆதாரங்கள்
7. கடவுளின் இருத்தல் நிலை நம் வாழ்வில் தரும் அர்த்தங்கள்
8. முடிவுரை

1. முன்னுரை:
Ontology என்ற சொல்லின் தமிழாக்கம் கடவுளின் இருத்தல் நிலை என்பதாகும். உலகத்தோற்றம் முதல் இந்த நாள் மட்டும் மனிதன் உலகத்தைப் புரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறான். இந்த அகில உலகத்தின் தோற்றம், இயற்க்கை அமைப்பு, அவற்றிலுள்ள நன்மையான மற்றும் தீமையான காரியங்கள் போன்றவை மனிதனின் என்னத்தில் பலவிதமான கேள்விகளை உருவாக்குகின்றன. இக்கேள்விகளுக்கு பதிலாகவே மனிதன் கடவுள் என்ற கண்ணுக்குத் தெரியாத ஓர் சக்தியை நம்ம ஆரம்பித்தான். அதாவது, கடவுளின் இருத்தல் நிலையை உணர ஆரம்பித்தான். ஆண்டுகள் பல உருண்டோடினாலும் கடவுள் உண்மையில் இருக்கிறாரா? இல்லையா என்ற கேள்வி மனிதனுக்குள் தொடக்கம் முதலே இருந்து வருகிறது.

மனிதர்கள் ஏன் கடவுளின் இருத்தல் நிலையை உணர ஆரம்பித்தார்கள்? எவ்வாரெல்லாம் கடவுளின் இருத்தல் நிலையை உணர்ந்தார்கள் என்றும், விவிலியத்தில் கடவுளின் இருத்தல் நிலை எப்படி உணர்;த்தப்படுகிறது என்றும் இக்கட்டுரையில் பார்ப்போம்.

2. மனிதன் ஏன் கடவுளின் இருத்தல் நிலையை ஆதரித்தான்?
A. இயற்க்கை படைப்பின் ஒழுங்கு:
நாம் வாழும் இப்புவியில் கோடிக்கணக்கான பறவைகளும், விலங்குகளும், ஊரும் பிராணிகளும் வாழ்ந்து வருகின்றன. மனித அறிவுக்கு எட்டாத எத்தனையே வியத்தகு அதிசயங்கள் இப்புவியில் உள்ளன. இவையனைத்தையும் பார்த்த மனிதன் இவ்வுலகத்தை ஏதோ ஓர் சக்தி இயக்கிக் கொண்டிருக்கிறது என்பதை உணர ஆரம்பித்தான்.

B. மனிதனின் ஆன்மீகத் தேடல்:
மனிதன் தன் உணர்ச்சிகரமான ஆதரவையும் மனநிம்மதியையும் கடவுளிடமிருந்து பெற விரும்பினான். எனவே, கடவுளைக் குறித்த தேடல் அதிகரித்தது. துவக்கத்தில் ஒரே கடவுளை வணங்கிக்கொண்டிருந்த மனிதன், அவர்களுக்குள்ளேயே கருத்து வேறுபாடு காணப்பட்டதால், தங்களுக்கென கடவுள்களை உருவாக்கிக்கொண்டும், கடவுளை வழிபடுவதற்கான சட்டதிட்டங்களை வகுத்துக்கொண்டும், பல்வேறு விதங்களில், பல்வேறு பிரிவுகளாக கடவுளை வழிபட்டு கடவுளின் இருத்தல் நிலையை உணர்ந்து கொண்டான்.

C. வாழ்க்கை அனுபவங்கள்:
அநேக மனிதர்கள் தங்கள் வாழ்க்கை பிரச்சனைகளின் ஊடாய், போராட்டங்களின் ஊடாய் கடந்து செல்லும்போது, எதிர்பாராத விதமாய் அவர்களுடைய பிரச்சனைகளுக்கும் போராட்டங்களுக்கும் முடிவு வரும் சமயத்தில் கடவுளின் இருத்தல் நிலையை உணருகிறார்கள்.

எடுத்துக்காட்டாக, கடன் பிரச்சனையினால் பாதிக்கப்பட்ட ஓர் குடும்பம், கடவுளை உண்மையாய் வழிபடும்போது, ஏதோ ஓர் விதத்தில் அவர்களுக்கு கடவுள் கடன்கள் முழுவதையும் அடைத்து முடிக்க அருள்புரிவாரானால், அந்த சூழலில் அவர்கள் கடவுளின் இருத்தல் நிலையை உணர்ந்து கொள்ளுகிறார்கள்.


3. மனிதன் ஏன் கடவுளின் இருத்தல் நிலையை ஆதரிக்க மறுத்தான்?
A. அறிவியல்:
கடவுளால் படைக்கப்பட்ட மனிதன், கடவுள் தனக்குக் கொடுத்த சிறிய அளவு படைத்த மூலையைக் கொண்டு, படைத்த கடவுளை அறிவியல் கண்ணோட்டத்தில் அறிய முயற்ச்சிக்கிறான். கடவுளை பார்த்தால் மாத்திரமே நம்புவேன் என்று சொல்லுகிறான். எந்தவொரு உண்மை அறிவியல் நிபந்தனைகளையும் கடந்து இருக்கக்கூடியவர் கடவுள் என்பதை மறந்து விடுகிறான்.

B. உலகில் நடைபெறும் தீமைகள்:
நாம் வாழும் இந்த உலகில, ஒவ்வொரு நாளும் எத்தனையோ தீமையான காரியங்கள் நடைபெறுகின்றன. வியாதிகள், கொல்லை நோய்கள், யுத்தங்கள், இயற்க்கை சீற்றங்கள் (புயல், சுனாமி, நிலநடுக்கம், நிலச்சரிவு) போன்றவற்றால் உலகில் ஒவ்வொரு நாளும் அநேகம் ஆயிரம் மக்கள் அழிந்துகொண்டிருக்கிறார்கள். இவைகளை பார்க்கும்போது, உண்மையில் கடவுள் ஒருவர் இருந்தால், ஏன் மனிதனுக்கு இப்படிப்பட்ட தீமையான காரியங்கள் நடைபெற வேண்டும். எனவே, கடவுள் என்ற ஓர் சக்தி இல்லை என்ற மனநிலைக்கு மனிதன் தள்ளப்படுகிறான்.

C. மானுடனே கடவுளைப் படைத்தான்:
மனிதர்களின் பயங்களுக்கும் அறியாமைக்குமே, கடவுள் என்ற சக்தி மனிதனால் உருவாக்கப்பட்டது. மனிதன் தான் கடவுளை உருவாக்கினான். கடவுள் மனிதனை உருவாக்கவில்லை. எனவே, கடவுள் இல்லை என்ற கருத்து அநேகருக்குள் இன்றும் இருந்து வருகிறது.

4. விவிலியத்தில் கடவுளின் இருத்தல் நிலை:
கிறிஸ்தவர்களாகிய நாம் பயன்படுத்தும் விவிலியமானது, கடவுளால் நமக்கு கொடுக்கப்பட்டது ஆகும். விவிலியம் உலகில் உள்ள அனைத்து மக்களுக்காகவும் எழுதப்பட்டது அல்ல. கடவுளுடைய சொற்களை நம்புகிறவர்களுக்காகவே விவிலியம் கொடுக்கப்பட்டது.

தொடக்கநூல் 1:1-ல் தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தார் என்றே படிக்கிறோம். இங்கே கடவுள் என்ற பெயர் மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்தக் கடவுள் யார்? அவருடைய பெயர் என்ன? அவருடைய வல்ல செயல்கள் என்ன? போன்ற எந்த விளக்கமும் அங்கு கொடுக்கப்படவில்லை. எனவே, தொடக்கநூல் 1:1-ல் இருந்து, கடவுளின் இருத்தல் நிலையை உணருகிறவர்களுக்காக மாத்திரமே விவிலியம் எழுதப்பட்டது. மாறாக, யார் அந்தக் கடவுள் என்று குறுக்குக் கேள்வி கேட்பவர்களுக்காக விவிலியம் எழுதப்படவில்லை என்பதை நாம் அறிந்து கொள்கிறோம்.

A. படைப்பு சான்று:
வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன. வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றன என்று திருப்பாடல்கள் 19:1-ல் படிக்கின்றோம். இத்திருமொழிப்படி, கடவுள் படைத்த வானமும், பூமியும், வான்வெளியும், அவைகளிலுள்ள அனைத்துமே கடவுளின் இருத்தல் நிலையை எடுத்துரைக்கின்றன.

காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தெய்வத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும் (உரோமையர் 1:20) என்ற திருமொழிப்படி, கடவுளை மனிதனால் பார்க்கமுடியாது என்றாலும், கடவுள் படைத்த ஒவ்வொரு படைப்புகளின் வலியாக கடவுளின் இருத்தல் நிலையை மனிதனால் உணர முடியும்.

B. மனச்சான்று:
உரோமையர் 2:14,15 ஆகிய திருமொழிகள், உண்மைக் கடவுளை வழிபடுகிறவர்கள் கடவுள் அவர்களுக்கு வகுத்துக்கொடுத்த திருச்சட்டங்களின் படி கடவுளின் இருத்தல் நிலையை உணருகிறார்கள். உண்மைக் கடவுளைப் பின்பற்றாதவர்களும், தங்களுடைய மனசாட்சியின்படி கடவுளின் இருத்தல் நிலையை உணருகிறார்கள் என்று படிக்கிறோம். கடவுள்பயம் இல்லாதவர்களும், கடவுள் இல்லை என்று சொல்லுபவர்களும், தங்களின் மனச்சான்றுகளின் படி நீதியுணர்வு, கருணை உள்ளம், பரிவு போன்ற செயல்களின் ஊடே கடவுளின் இருத்தல் நிலையை உணருகிறார்கள்.

3. வரலாற்றுச் சான்று:
கடவுளின் இருத்தல் நிலையை விவிலிய அடிப்படையில் உணர, விவிலிய வரலாறு நமக்கு சான்றாக இருக்கிறது. ஆபிரகாமிடம் கடவுள், உன் மக்கள் அடிமைளாக்கப்படுவார்கள் என்றும், நானூறு ஆண்டுகளுக்குப் பின்பு அவர்கள் மீண்டுமாய் தங்கள் நாட்டிற்கு திரும்புவார்கள் என்றும் இறைவாக்காகச் சொன்னார் (தொடக்கநூல் 15:13). இவ்வாக்கு பல நூறு ஆண்டுகளுக்குப் பின்பு அப்படியே நிறைவேறிற்று.

கிறிஸ்து பிறப்பார் என்று ஏசாயா இறைவாக்கினரால் உரைக்கப்பட்ட இறைவாக்கு, சுமார் எட்டு நூற்றாண்டுகளக்குப் பிறகு நிறைவேறுவதை நாம் பார்க்கிறோம் (ஏசாயா 7:14)

இப்படி பல இறைவாக்கினர்கள் மூலமாக கடவுள் இஸ்ராயேல் மக்களுக்குக் கொடுத்த இறைவாக்குகள் அனைத்தும், பல நூற்றாண்டுகள் கடந்த பின்பும் நிறைவேறியிருப்பதை நாம் விவிலியத்தில் பார்க்க முடிகிறது. இது கடவுளின் இருத்தல் நிலையை நமக்கு உணர்த்துகிறது.

ஏசாயா 46:9,10
9. தொன்றுதொட்டு நிகழ்ந்தவற்றை நினைத்துப்பாருங்கள். நானே இறைவன். என்னையன்றி வேறு கடவுள் இல்லை. என்னைப்போன்று வேறு எவரும் இல்லை.
10. பின் நிகழவிருப்பத்தைத் தொடக்கத்திலே நான் அறிவித்தேன். இனி நடப்பனவற்றை பண்டைக் காலத்திலேயே முன்னுரைத்தேன். "என் திட்டம் நிலைத்திருக்கும். என் விருப்பத்தை நிறைவேற்றுவேன்" என்றுரைத்தேன்.

4. கிறிஸ்துவின் சான்று:
இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை, போதனை, அவரால் நிகழ்த்தப்பட்ட அற்புதங்கள், அடையாங்கள், இயேசுவின் சிலுவை மரணம், அவருடைய உயிர்த்தெழுதல் ஆகியவை கடவுளின் இருத்தல் நிலையையும், கடவுள் மனிதகுலத்தின் மேல் வைத்துள்ள அன்பையும் காட்டுகிறது.

யோவான் 1:18-ல் கடவுளை ஒருவராலும் பார்க்க முடியாது என்றும், அவருடைய ஒரே மகன் இயேசு கிறிஸ்துவே கடவுளை வெளிப்படுத்துவார் என்றும் எழுதப்பட்டுள்ளது. யோவான் 14:9-ல் இயேசு என்னைக் கண்டவர் கடவுளைக் கண்டார் என்று சொல்லுகிறார்.

இவ்வசங்களின் மூலம் கடவுளின் இருத்தல் நிலைக்கு இயேசு கிறிஸ்துவின் வாழ்வு ஓர் சான்றாக அமைகின்றது.

5. விவிலியத்தில் கடவுளின் இருத்தல் நிலையை மறுக்கும் மனிதர்கள்
கடவுளின் இருத்தல் நிலையை மறுப்பவர்களைக் குறித்து விவிலியத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. திருப்பாடல்கள் 14:1-ல் கடவுள் இல்லை என்று சொல்பவர் மூடர்கள்.

அழிவில்லாக் கடவுளை அழிவும் பொருட்களான பறவைகள், விலங்குகள், ஊரும் பிராணிகளோடு மனிதன் ஒப்பிடுகிறான். (உரோமையர் 1:23). இயற்க்கையனைத்தையும் கடந்து நிற்ப்பவர் கடவுள் என்பதை மறந்துவிட்டான். இப்படிப்பட்டவர்கள் மூடர் என்கிறார் கடவுள்.

6. கடவுளின் இருப்பு நிலை பற்றிய தத்துவ ஆதாரங்கள்:
Cosmological Argument: இவ்வுலகமும், அவற்றில் உள்ள அண்டசராசரமும் படைக்கப்பட்டது என்றால் அதற்கு ஓர் சக்தி காரணமாக இருக்க வேண்டும். அச்சக்தியையே திருவிவிலியத்தில் யாவே கடவுள், உண்மைக் கடவுள் என்று வாசிக்கிறோம்.

Teleological Argument: இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒழுங்காய் படைக்கப்பட்டுள்ளது. சரியான நோக்கத்திற்காகவே அவையனைத்தும் செயல்படுகின்றன. இத்திட்டத்தை வகுத்த ஓர் படைப்பாளர் இருக்க வேண்டும். அவரே எல்லாம் வல்ல இறைவன்.

Moral Argument: இவ்வுலகில் உள்ள அனைத்துமே ஓர், நெரிமுறைகளுக்குள் அடங்கியிருக்கின்றன. அந்த நெறிமுறைகளின் ஆதாரம் கடவுளே.
விவிலியம் இவைகளையெல்லாம் உறுதிபடுத்துகிறது. மனித அறிவால் மட்டுமே கடவுளின் இருத்தல் நிலையை முழுமையாக அறிய முடியாது.

1 கொரிந்தியர் 1:21
கடவுளுடைய ஞானத்தால் அவரை அறிந்து கொள்ளமுடியும். ஆனால், உலகினர் தம் ஞானத்தால் கடவுளை அறிந்து கொள்ளவில்லை.
மனித ஞானத்தைக் கொண்டு கடவுளின் இருத்தல் நிலையை ஒருபோதும் மனிதனால் கண்டுகொள்ள முடியாது.

7. கடவுளின் இருப்பு நிலை நம் வாழ்வில் தரும் அர்த்தம்:
படைப்பாளி ஒருவர் இருக்கிறார். அவரே நம் அனைவரையும் உருவாக்கினவர். நம் வாழ்வின் நோக்கத்தையும், அர்த்தத்தையும் உணர்த்துபவர் அவரே.

எரேமியா 29:11
ஏனெனில் உங்களுக்காக நான் வகுத்திருக்கும் திட்டங்கள் எனக்குத் தெரியும் அன்றோ! அவை வளமான எதிர்காலத்தையும் நம்பிக்கையும் உங்களுக்கு அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டங்களே அன்றி, கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல என்கிறார் ஆண்டவர்.

கடவுளின் இருத்தல் நிலை நமக்கு வாழ்வின் நெறிமுறைகளையும், நீதிமுறைகளையும், அன்பையும் கற்றுக்கொடுக்கிறது.

நாம் கடவுளின் இருத்தல் நிலையை அறிந்து கொள்ளும் அறிவில் வளர அழைக்கப்படுகிறோம். (யோவான் 17:3)

8. முடிவுரை:
விவிலியம் கடவுளின் இருப்பை நிரூபிக்க அல்ல. மாறாக, கடவுள் யார்? நாம் அவரோடு எப்படி உறவு கொள்ள வேண்டும்? என்பதை வெளிப்படுத்துகிறது. படைப்பின் சாட்சியும், மனசாட்சியும், வரலாறும், கிறிஸ்துவின் வெளிப்பாடும் சேர்ந்து, "தொடக்கத்திலும், இன்றும், என்றும் இருக்கும் ஒரே உண்மைக் கடவுள் யாவே கடவுளே" என்பதை உறுதிபடுத்துகின்றன.

எபிரெயர் 11:6
நம்பிக்கையினாலன்றி எவரும் கடவுளுக்கு உகந்தவராயிருக்க இயலாது. ஏனெனில், கடவுளை அணுகிச் செல்வோர் அவர் இருக்கிறார் என்பதையும் அவரைத் தேடிச் செல்வோருக்குத் தக்க கைம்மாறு அளிக்கிறார் என்பதையும் நம்ப வேண்டும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.