தமஸ்குவைச் சார்ந்த யோவான்
St. John of Damascus
உள்ளடக்கம்:
- முன்னுரை
- பிறப்பு
- திருச்சபைக்கு யோவானின் பங்களிப்பு
- சிலை வழிபாட்டை யோவான் ஆதரித்தல்
- திரித்துவ போதனைகள்
- முக்கிய நூல்கள்
- இறுதிக் காலம்
- புனிதர் யோவான்
- எனது கண்ணோட்டம்
- முடிவுரை
1. முன்னுரை:
தமஸ்குவைச் சார்ந்த யோவான் என்பவர் கிறிஸ்தவ வரலாற்றில் மிக முக்கிய இடத்தைப் பிடித்த புனிதர் ஆவார். இவர் சிறந்த பாடல் ஆசிரியர், திருச்சபையின் தந்தை என்றும் அழைக்கப்பட்டவர். கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதி மற்றும் எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த இவர், கிழக்கு கிறிஸ்தவ மரவழா திருச்சபைகளில் மிக முக்கிய கோட்பாடுகளை விட்டுச்சென்றவர் ஆவார். திருத்தூதுவர்களின் போதனைகளை தழுவி எழுதப்பட்ட இவரின் போதனைகள், பாரம்பரிய கிறிஸ்தவர்களின் சடங்குமுறைகளை கண்டித்தும், உண்மையான வழிபாடு குறித்த வெளிப்பாடு கொண்டதாகவும் இருந்தது.
2. பிறப்பு:
தமஸ்குவைச் சார்ந்த யோவான் சிரியா நாட்டில் உள்ள தமஸ்கு நகரில் கி.பி. 675-ம் ஆண்டு உயர்குல கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தகப்பனார் சிரியா நாட்டில் இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கு சேவை புரியும், உயர்குடி அரசு அலுவலராக பணிபுரிந்தார்.
யோவான் கல்வியில் சிறந்து விளங்கினார். கிரேக்கம், அராமிய மொழிகளில் பட்டப்படிப்பு முடித்தார். மாத்திரம் அல்ல, இசை, கணிதம், தத்துவம் போன்றவற்றில் தலைசிறந்த மாணவராகவும் இவர் விளங்கினார்.
3. திருச்சபைக்கு யோவானின் பங்களிப்பு:
தமஸ்குவைச் சார்ந்த யோவான் கிறிஸ்தவ சமயத்திற்கும், புனித மரபுகளுக்கும் ஆற்றிய தொண்டுகள் பல உள்ளன. இடைக்கால கிறிஸ்தவ சமயத்திற்கு அடித்தளமிட்டவர் இவரே. திருச்சபைக்கும், சமுதாயத்திற்குமான இவருடைய போதனைகள் அனைத்தும் திருத்தூதுவர்களின் போதனையை அடியொட்டியதாகவே இருந்தது. இவர் எழுதிய The Fount of Knowledge என்ற நூல் திருச்சபையின் வளர்ச்சிக்கான அநேக தத்துவக் கருத்துக்களைக் கொண்டதாகவும், திரிபுக்கோட்பாடுகளை எதிர்த்து, திருச்சபை மக்களை பற்றுறுதியில் உறுதியாய் நிலைத்திருக்கச் செய்வதாகவும் இருந்தது.
4. சிலை வழிபாட்டை யோவான் ஆதரித்தல்:
பைசாந்திய பேரரசுகள் ஆட்சி செய்து கொண்டிருந்த எட்டாம் நூற்றாண்டில் இக்னோசிகம் (Iconoclasm) என்ற ஓர் இயக்கம் உருவானது. இந்த இயக்கத்தினர் கடவுள் உருவமற்றவர், எனவே கடவுளை ஓவியமாகவோ, சிலையாகவோ உருவாக்கி வழிபடுவது மிகவும் தவறானது. இது கடவுள் நம்பிக்கைக்கு முற்றிலும் எதிரானது, கடவுளும் இதை விரும்ப மாட்டார். எனவே சிலைகள் அனைத்தையும் அழிக்க வேண்டும் என்று இவ்வியக்கத்தினர் கூறினார்கள்.
இந்த சிலை விரோத இயக்கத்தை எதிர்த்து முதல் முதலில் குரல் கொடுத்தவர் இந்த யோவான் ஆவார். இதைக் கண்டித்து, இவர் நூல்களும் எழுதியுள்ளார்.
கிறிஸ்தவ வழிபாட்டு மனைகளில் சிலைகள் இருப்பது தவறு அல்ல என்று செல்லும் யோவான் அதற்காக எடுத்துரைக்கும் உரைகள் இவைகளே:
1. கடவுளை ஒருவரும் ஒருக்காலும் கண்டதில்லை என்று முதல் உடன்படிக்கை நூலில் வாசிக்கிறோம். ஆனாலும், காணக்கூடாத இறைவன், இயேசு என்ற அவதாரம் மூலமாய் மனிதராகத் தோன்றினார். இயேசுவின் உருவத்தை வரைவது, அவதாரத்தின் உண்மைச்சாட்சியை வெளிக்கொணர்வதாகும். நாம் சிலைகளை வணங்குவதில்லை. ஆனால் சிலையில் சித்தரிக்கப்பட்டுள்ள நபரை மதிக்கிறோம்.
2. சிலைகள் என்பது கடவுள் அல்ல. சிலைகள் கடவுளின் இருத்தல் நிலையை நாம் உணருவதற்கு வழிவகுக்கிறது. சிலைகள் மற்றும் ஓவியங்கள் கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற நினைவுகளையும், அமைதியையும் கொடுக்கின்றது.
3. நாம் வரலாற்றை அறிந்துகொள்ள, புத்தகங்கள் படிக்கின்றோம். அதைப்போலவே, இறைவனின் வரலாற்றை நினைவுபடுத்தும் புனித எழுத்துக்களாக சிலைகள் இருக்கின்றன.
4. முதல் உடன்படிக்கையில் சிலைவழிபாடு எதிர்க்கப்பட்டது. ஏன் என்றால், கடவுள் காணமுடியாதவராக இருந்தார். இரண்டாம் உடன்படிக்கையில் இறைவன் மனிதஉருவானதால், அவருக்கென்று உருவம் உள்ளது. அந்த உருவத்தை சிலையாகவோ, ஓவியமாகவே செய்து, வழிபடுவது, புனிதமானதாகும்.
5. சிலைகளை அழிப்பது என்பது திருச்சபையின் மரபையும், இயேசு மனித அவதாரம் எடுத்ததையும் நாம் மறுப்பதற்கு சமம் ஆகும்.
6. நாம் சிலைகளின் முன்நின்று வழிபடுவது தவறு. ஆனால், நாம் வழிபடும்போது, அருகில் சிலைகள் அல்லது ஓவியங்கள் இருப்பது, கடவுள் நம்மோடு இருக்கிறார், என்ற உணர்வையும், மன அமைதியையும் நமக்குக் கொடுக்கிறது.
இவைகளே யோவான் அவர்கள் சிலைவழிபாடு சரி என வலியுறுத்தி எழுதிய வார்த்தைகள் ஆகும். இவற்றை அவர் எழுதிய நூலில் Tree Treatises on the Divine Images என்ற தலைப்பில் பார்க்க முடியும்.
5. திரித்துவ போதனைகள்:
யோவான் திரித்துவம் என்பது கடவுளிடமிருந்து வெளிப்பட்டது, திரித்துவம் மனிதனால் உண்டாக்கப்பட்டதல்ல என்பதை ஆழமாக வலியுறுத்தினார். ஒரே கடவுள் மூன்று நிலைகளில் (பெற்றவர், மைந்தர், தூய ஆவியார்) செயல்படுகிறார் என்பது இவரது ஆழமான நம்பிக்கை. எல்லாவற்றிற்கும் ஆதாரமானவர் பெற்றவராகிய கடவுள், பெற்றவராம் கடவுளிடமிருந்து வந்தவரே மைந்தர், பெற்றவராம் கடவுளிடமிருந்து புறப்படுகிறவரே தூய ஆவியார் என்பது இவரது கோட்பாடு.
6. யோவானின் முக்கிய நூல்கள்:
யோவான் எழுதிய நூல்கள் அனைத்தும் கிறிஸ்தவ சமயத்திற்கும், வழிபாடுகளுக்கும் மிகவும் முக்கிய ஆழமான இறையியல் கருத்துக்களை தருகின்றன.
இவர் எழுதி வெளியிட்ட நூல்களில் The Fount of Knowledge என்ற நூல் மிகவும் சிறந்த நூல் ஆகும். அவை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. அவை:
1. Philosophical Chapters (தர்க்கவியல் அடிப்படைகள்)
2. Heresies (திருச்சபைக்கே எதிரான வழுவுகளின் பட்டியல்)
3. An Exact Exposition of the Orthodox (கிழக்கு மரபுவழி விசுவாசத்தின் முழுமையான விளக்கம்)
மரபுவழா திருச்சபையின் வழிபாட்டில் பாடப்படும் கீர்த்தனைப் பாடல்கள், இறைவேண்டல் பாடல்கள் பெரும்பாலும் யோவான் அவர்களால் எழுதப்பட்டவைகளே. அது மாத்திரம் அல்ல, இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல், புனிதர்களின் நினைவு நாள் ஆகியவற்றிற்கான பாடல்களையும் இவர் எழுதியுள்ளார். அந்த பாடல்கள் அனைத்தும் கிழக்கு மரவழா திருச்சபைகளில் இன்று வரை பயன்படுத்தப்படுகின்றன.
முக்கிய நூல்கள்:
1. Exposition of the Orthodox Faith (நியாயவழி பற்றுறுதி விளக்கம்)
2. Fount of Knowledge (கிறிஸ்தவ சமயத்தின் கலைக்களஞ்சியம்)
3. Hymns & Poems (பாமாலைகள் மற்றும் கீர்த்தனைகள்)
7. இறுதிக் காலம்:
கிழக்கு மரவழா திருச்சபைக்காகவும், திரிபுக்கோட்பாடுகளை எதிர்த்தும் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்த யோவான் தன்னுடைய கடைசி காலத்தில் எருசலேம் நகருக்கு அருகில் உள்ள செயின்ட் சபா (Mar Saba Monastery) என்ற மடத்தில் துறவற வாழ்க்கையை மேற்க்கொண்டார். அந்த துறவர மடத்திலேயே கி.பி. 749-ம் ஆண்டு மரித்தார்.
8. புனிதர் யோவான்:
யோவான் அவர்களின் முயற்சிகளுக்காகவும், திருச்சபைக்கு அவர் ஆற்றிய அருள் தொண்டிற்காகவும், கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய திருச்சபைகள் இணைந்து இவரை புனிதர் என மதித்தனர்.
கிழக்கு மரவிழா திருச்சபையினர் டிசம்பர் நான்காம் நாளை புனித யோவானின் திருநாளாக கொண்டாடிவருகிறார்கள்.
கிரேக்க மரபுவழி திருச்சபைகளின் கடைசி தந்தை என இவர் அழைக்கப்படுகிறார். (Last of the Greek Church Father)
9. எனது கண்ணோட்டம்:
இடைக்கால திருச்சபையின் சிறந்த தந்தை என்று அழைக்கப்படும் யோவான் அவர்கள் கிழக்கு மரவழா திருச்சபைக்கு ஆற்றிய தொண்டுகள் அநேகம். இவர் திருத்தூதுவர்களின் பற்றுறுதிக்கும், அவர்களின் இறை நம்பிக்கைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. திருச்சபைகளின் வழிபாட்டிற்கு பயன்படுத்தப்படும் இவருடைய பாடல்கள் இன்றளவும் பயன்படுத்தப்படுகிறது என்பது, அப்பாடல் வரிகளின் ஆழ்ந்த இறையியல் தன்மையையும், சபையாருக்கு ஆறுதலையும், மன அமைதியையும் கொடுக்கக்கூடியதாக உள்ளது என்பதை உணர்த்துகிறது.
யோவானின் பல கொள்கைகளில் சிலைவழிபாட்டை அவர் ஏற்றுக்கொண்டதும். அதை அவர் ஆதரித்ததும் எனக்கு நெருடலாயிருந்தது. இயேசு கிறிஸ்து திருப்பணி செய்த நாட்களில் சிலைவழிபாட்டைக் குறித்து கற்றுக்கொடுக்கவில்லை. இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை பின்பற்றின திருத்தூதுவர்களும் சிலைவழிபாட்டைக் குறித்த எந்த வித கோட்பாட்டையும் கற்றுக்கொடுக்கவில்லை. பின்நாட்களில் எழுந்த சபைத்தலைவர்கள் இயேசு கிறிஸ்துவை நேரில் பார்த்திராதவர்கள் இயேசுவுக்கென்று ஓர் உருவம் கொடுத்து, சிலையாக உருவாக்கினார்கள். இது சரிதானா? இயேசு எப்படிப்பட்டவர் என்று பார்த்திராத நாம், அவருக்கு உருவத்தை கொடுக்கலாமா? என்று எனக்குள்ளாக தோன்றுகின்றது.
10. முடிவுரை:
இடைக்கால திருச்சபையின் அடித்தளமாகவும், ஆதாரமாகவும் செயல்பட்டவர் தமஸ்குவைச் சார்ந்த யோவான். இவருடைய எழுத்துக்கள் நம்மை பற்றுறுதியின் ஆழத்திற்கு அழைத்துச் செல்கின்றன. திருச்சபையின் நிலைத்த நிலைகளை நாம் இன்று அறிந்துகொள்ள இவருடைய படைப்புகள் சுடர் விளக்காக இருக்கின்றன.
துணை நின்ற நூல்:
1) தா. சேவியர் டெரன்ஸ். திருஅவை வரலாறு – 2: திருஅவைத் தந்தையார் இயல், திருச்சிராப்பள்ளி: தேடல் வெளியீடுகள், 2017.
