Type Here to Get Search Results !

OT Assignment | Monarchy | People of God Old Testment | Jesus Sam

முடியாட்சியின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்குமான காரணிகள், இஸ்ரவேலர்களின் வாழ்க்கையில் அவைகளின் விளைவுகள்:
Facters that contibuted to the rise and fall of monarchy and its effects on the life of the Isreal

உள்ளடக்கம்
1. முன்னுரை
2. முடியாட்சி
3. முடியாட்சியின் தோற்றம்
4. முடியாட்சியின் வளர்ச்சி
5. முடியாட்சியின் வீழ்ச்சி
6. மக்களுக்கு கிடைத்த நன்மைகள்
7. மக்களுக்கு ஏற்ப்பட்ட பாதிப்புகள்
8. முடிவுரை

1. முன்னுரை:
இஸ்ரவேல் மக்களுக்கு கடவுள் ஒருவரே தலைவராகவும், அரசராகவும் இருந்த காலம் அது. மற்ற நாடுகளில் அரசர்கள் இருப்பதைப் பார்த்த இஸ்ராயேல் மக்கள் தங்கள் நாட்டிலேயும் அரசர் வேண்டும் என எண்ணி, கடவுளிடம் முறையிட்டனர். இஸ்ரவேல் மக்களின் விருப்பத்திற்கு இனங்க கடவுளும் ஓர் அரசை ஏற்ப்படுத்தினார். மக்களின் விருப்பத்தினால் இஸ்ரவேல் நாட்டில் உருவான அரசாட்சியின் வளர்சியைப் பற்றியும், பின்நாட்களில் இவ்வரசாட்சி எப்படி வீழ்ச்சியடைந்தது என்பது பற்றியும் இந்த ஆய்வுக் கட்டுரையில் காண்போம்.

2. முடியாட்சி:
முடியாட்சி என்பதை முடி+ஆட்சி என்று பிரிக்கலாம். முடி என்ற பதம் மன்னனின் அரசு பதவியை அடையாளப்படுத்துகிறது. ஆட்சி என்பது நாட்டை நிர்வகிக்கும் அதிகாரத்தைக் குறிக்கிறது.

முடியாட்சி என்ற பதம் ஆங்கிலத்தில் Monarchy என்று அழைக்கப்படுகிறது. இந்த வார்த்தை கிரேக்க மொழியிலிருந்து எழுதப்பட்ட வார்த்தை ஆகும். இதன் அர்த்தம் ஒருவரின் ஆழுகை அல்லது ஆட்சி என்பதாகும்.

ஒரு மன்னர் அல்லது ராணியின் அதிகாரத்தில் நாட்டில் உள்ள அனைவரும் கட்டுப்பட்டு இருப்பதையே முடியாட்சி என்று சொல்லுகிறோம். ஒரு நாட்டின் சட்டம், நிர்வாகம், இராணுவம் அனைத்தையும் முடிவு செய்யக்கூடியவர் மன்னரே.

3. இஸ்ரவேல் நாட்டில் முடியாட்சியின் தோற்றம்:
கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்து நாட்டில் அடிமைகளாக இருந்த இஸ்ரவேல் மக்களை யாவே கடவுள் மோசே என்ற ஒரு மனிதரின் தலைமையில் பாலும் தேனும் ஓடுகின்ற கானான் தேசத்திற்கு அழைத்து வருகின்றார். மோசேயை தொடர்ந்து யோசுவா மற்றும் பல தலைவர்கள் எழும்பி, கடவுளின் அருளால் இஸ்ராயேல் மக்களின் குறைகளை அவ்வப்போது தீர்த்து வந்தார்கள்.

மக்களுக்கு பிரச்சனைகள் வருகின்றபோது, போராட்டங்கள் வருகின்றபோது, எதிரி நாட்டவரிடமிருந்து அச்சுருத்தல்கள் வருகின்றபோது, கடவுளால் தெரிவுசெய்யப்பட்ட ஓர் தலைவர் எழும்பி, எதிரிகளிடமிருந்து இஸ்ராயேல் மக்களை மீட்டு, பாதுகாப்பார். எதிரிகளிடமிருந்து மக்களை பாதுகாக்கின்ற தலைவர்களை நீதித்தலைவர்கள் என்று அவர்கள் அழைத்தனர்.

எகிப்து தேசத்திலிருந்து வந்த இஸ்ரவேல் மக்கள் கானான் நாட்டில் தங்கள் குலப்பிரிவின் படி 12 குழுக்கலாக பிரிந்து வாழ ஆரம்பித்தார்கள். இவர்களை வழிநடத்த மத்தியில் ஓர் அரசு இல்லை. இஸ்ராயேல் மக்களின் 12 குலங்களில் ஏதேனும் ஓர் குலத்திற்கு அச்சுருத்தல் வருகின்றபோது, எதிரிகளால் போராட்டம் வருகின்றபோது, அந்த குலத்திலிருந்து ஓர் தலைவரை கடவுள் எழுப்புவார், அவர் அந்த குலத்தை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பார்.

இப்படி அவ்வப்போது தலைவர்கள் எழும்பி, இஸ்ராயேல் மக்களை எதிரிகளிடமிருந்து காப்பாற்றினாலும், அந்த தலைவர்கள் ஒரே குலத்திலிருந்து எழும்பவில்லை. எந்த குலத்திற்கு பிரச்சனைகளும், போராட்டங்களும் ஏற்ப்படுகின்றதோ, அந்த குலத்திலிருந்து ஒரு தலைவர் எழும்பி, அக்குலத்திற்கான பிரச்சனையிலிந்து அவர்களை விடுவிப்பார்.

கானான் என்ற ஒரே நாட்டில் இஸ்ராயேல் மக்கள் வாழ்ந்தாலும், 12 குழுக்களாக பிரிந்து, யோசுவா அவர்களுக்கு கொடுத்த நிலப்பகுதியிலேயே வாழ்ந்து வந்தார்கள். அந்த குலங்களுக்குள்ளேயே பெண் கொடுத்து, பெண் எடுத்துக்கொண்டார்கள். தங்களுக்கென கொடுக்கப்பட்ட நிலத்தை மற்ற குலத்தினருக்கு விற்க்கக்கூடாது என்ற சட்டமும் அவர்களிடம் இருந்தது.

இப்படிப்பட்ட காலத்தில் எதிரிநாடுகளான பெலிஸ்தியர்கள், அம்மோனியர்கள், மோவாபியர்கள் போன்ற சக்திவாய்ந்த இராணுவ பலம் கொண்ட அரசர்கள் தொடர்ந்து இஸ்ரவேலை அச்சுருத்திக்கொண்டிருந்தனர். கடவுள் அவ்வப்போது ஏற்ப்படுத்திய நீதித்தலைவர்களினால் தற்க்காலிகமான விடுதலை மாத்திரமே கிடைத்தது. நிரந்தர விடுதலை கிடைக்க வேண்டுமானால், அதற்கு ஒரு நிரந்தர தலைவர் அதாவது ராஜா வேண்டும், நிரந்தர இராணுவ அமைப்பு வேண்டும் என அவர்கள் கருதினர்.

12 குலங்களும் தனித்தனியாக வாழ்ந்தமையால், தங்களை கூட்டிச்சேர்த்து, ஒருங்கிணைந்த ஒரு நாட்டை உருவாக்க, மத்தியில் ஓர் அரசர் தேவை, முடியட்சி தேவை என மக்கள் விரும்பினர்.

இஸ்ரவேல் நாட்டைச் சுற்றியுள்ள அண்டை நாடுகள் அனைத்திலும் அரசர்கள் இருந்தனர், முடியாட்சி இருந்தது. எனவே, தங்களுக்கும் ஓர் அரசர் வேண்டும் என மக்கள் கேட்டனர். (1 சாமுவேல் 8:5)

ஏலியின் மக்களான ஓப்னியும், பினேகாசும் ஏலியின் முதிர்வயதிலே, கர்த்தருடைய ஆசரிப்புக் கூடார வாசலில் பெண்களோடே சயனித்து, கர்த்தருடைய புனித தலத்தின் புனிதத்தைக் கெடுத்தார்கள். (1 சாமுவேல் 2:22)

இஸ்ரவேல் நாட்டின் கடைசி நீதித்தலைவர் சாமுவேல் ஆவார். சாமுவேல் தனது முதிர் வயதில் தன் மகன்கள் இருவரையும் (யோவேல், அபியா) நீதித்தலைவர்களாக ஏற்ப்படுத்தினார். அவர்கள் மக்களிடத்தில் லஞ்சம் பெற்றுக்கொண்டு நீதிக்கு பதிலாக அநீதியையே செய்தார்கள். (1 சாமுவேல் 8:3). நீதித்தலைவர்கள் நீதியைப் புறட்டியதாலும், ஊழலும், லஞ்சமும் பெருகிப்போனதால், தங்களுக்கு ஓர் அரசர் வேண்டும் என இஸ்ரவேலர்கள் கேட்டனர்.

இவைகள் அனைத்துமே, இஸ்ரவேல் மக்கள் தங்களுக்கு முடியாட்சி வேண்டும் என்று முறையிடுவதற்கு காரணமாக அமைந்தது.

மக்களின் கூக்குரலுக்கு இனங்க கர்த்தர் மிகவும் உயரமான, அழகான, வீரம் கொண்ட ஒரு வாலிபனை அவர்களுக்காக ராஜாவாக ஏற்ப்படுத்தினார். அவர் பெயர் சவுல். (1 சாமுவேல் 9:2). கடவுளின் ஆலோசனைப் படி சாமுவேல் இறைவாக்கினரே சவுலை இஸ்ரவேலின் முதல் ராஜாவாக ஏற்ப்படுத்தினார்.

4. முடியாட்சியின் வளர்ச்சி:
a) சவுல் மன்னனின் காலம்:
இஸ்ரவேல் நாட்டில் முதல் மன்னரான சவுல் பென்யமீன் குலத்தைச் சார்ந்தவர். சவுலின் தந்தை பெயர் கீஸ். இவர் பென்யமீன் குலத்தில் மிகப்பெரிய செல்வந்தராகவும், புகழ்பெற்றவராகவும் விளங்கினார்.

சவுலின் ஆரம்ப நாட்களில் இஸ்ரவேலர்கள் அம்மோனியர்கள், பெலிஸ்தியர்கள் போன்ற பலம் வாய்ந்த எதிரி நாடுகளிடம் போர்புரிந்து வெற்றி பெற்றனர்.

சவுல் அரசன் இஸ்ரவேலை 40 ஆண்டுகள் ஆட்சி செய்தார். ஆட்சிக்காலம் கி.மு. 1050 – 1010.

b) தாவீது மன்னரின் காலம்:
தாவீது இஸ்ரவேலின் இரண்டாவது அரசர் ஆவார். இவர் யூதா குலத்தைச் சார்ந்தவர். இவரின் தகப்பன் பெயர் ஈசாய். இவருடைய ஆட்சிக்காலம் கி.மு. 1010 – 970. இவரும் இஸ்ரவேலை 40 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

தாவீதின் நாட்களில் இஸ்ரவேல் நாடானது இராணுவம், அரசியல், மதம் மற்றும் பொருளாதாரத்தில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தது.

தாவீது அரசர் பெலிஸ்தியர், மோவாபியர், ஏதோமியர், அம்மோனியர், அராமியர் போன்ற நாட்டினரிடமிருந்து இஸ்ரவேலுக்கு பாதுகாப்பு ஏற்ப்படுத்தியதோடு, நாட்டின் எல்லைகளையும் விரிவுபடுத்தினார். இவருடைய ஆட்சியின் கீழ் வழுவான இராணுவ அமைப்பு உருவானது. நாட்டின் எல்லையை யூப்ரடிஸ் நதி வரை விரிவுபடுத்தினார் தாவீது. (2 சாமுவேல் 8)

தாவீதின் நாட்களில் எருசலேம் முழு இஸ்ரவேல் நாட்டிற்கும் தலைநகரமாக மாற்றப்பட்டது. இதனால், அரசியல், மத, இராணுவ மையமாக எருசலேம் உருவானது.

12 குலங்களையும் ஒரே நாடு என்ற அடையாளத்தின் கீழ் தாவீது இணைத்தார். நாட்டில் திறமையான நிர்வாகிகள், படைத்தலைவர்கள், நீதியரசர்களை நியமித்தார்.

உடன்படிக்கைப்பெட்டிக்கென்று நிலையான ஒரு இடத்தை ஏற்ப்படுத்தினார். ஆங்காங்கே உடன்படிக்கைப் பெட்டியை வைத்து வழிபாடு நடத்திக்கொண்டிருந்த நாட்களில், உடன்படிக்கைப் பெட்டியை எருசலேமுக்குக் கொண்டு வந்து, மத்திய வழிபாட்டு மையமாக எருசலேமை உருவாக்கினார். (2 சாமுவேல் 6)

வழிபாடுகளுக்குத் தேவையான இசைகள், பாடல்கள் ஆகியவற்றை எழுதி, மக்கள் வழிபாடுவதற்கு தேவையான வழிபாட்டு ஒழுங்குமுறையை உருவாக்கினார். (1 நாளாகமம் 25)

கடவுளை வழிபடுவதற்காகவும், மக்களை ஒற்றுமையாய் வைத்திருப்பதற்காகவும், மிகப்பெரிய கோவில் ஒன்றை கட்டவேண்டும் என்று பேரார்வம் கொண்டார். ஆனால் கடவுள் அப்பணியை தாவீதின் மகன் சாலோமோனுக்குக் கொடுத்தார்.

தாவீது போரில் அடைந்த வெற்றியின் மூலமாக தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்ற வளங்கள் கிடைத்தன. தாவீது தனது முயற்ச்சியினாலும். திறமையினாலும் அண்டைநாடுகளுடன் வணிக, அரசியல் நட்புறவை ஏற்ப்படுத்தினார். நிலையான வரிவிதிப்பின் மூலமாக, நாட்டின் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் உயர்ந்தது.

c) சாலொமோன் மன்னனின் காலம்:
இஸ்ரவேலின் மூன்றாவது அரசர் சாலொமோன் ஆவார். இவரின் தகப்பன் பெயர் தாவீது. இவரும் இஸ்ரவேல் நாட்டை 40 ஆண்டுகள் ஆட்சி செய்தார். காலம் சுமார் கி.மு. 970 – 930 ஆகும். இவர் சிறந்த ஞானம் மிக்க அரசன் என்று உலக நாடுகளால் புகழப்பெற்றார்.

சாலொமோனின் ஆட்சிக்காலத்தில் இஸ்ரவேல் நாடானது மதம், அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் போன்ற அனைத்திலும் புகழ் பெற்று விழங்கியது.

12 குல மக்களும் ஒரே இடத்தில் கடவுளை தொழுதுகொள்ளுவதற்கு ஏற்ற விதத்திலும், நாட்டின் ஒற்றுமையை நிலை நிறுத்துவதற்கும், தாவீது அரசரின் ஆலோசனைப்படி எருசலேம் நகரில் மிகப்பெரிய கோவில் கட்டப்பட்டது. (1 இராஜாக்கள் 6-8). இதனால் இஸ்ரவேலின் மத மையமாக எருசலேம் மாற்றப்பட்டது. கோவிலில் வழிபாட்டு முறைகள் சீரமைக்கப்பட்டன. ஆசாரியர்கள் லேவியர்களுக்கான பணிகள் திட்டமிடப்பட்டு செயல்வடிவம் பெற்றன.

சாலொமோனின் நாட்களில் இஸ்ரவேல் நாட்டின் இராணுவம் மிகப்பெரிய உச்சத்தை அடைந்தது. இரும்பு கொண்டு போர் கருவிகளை உருவாக்கும் முறை இவர் காலத்தில் கொண்டு வரப்பட்டது. குதிரைப்படை முதல் முறையாக இஸ்ரவேல் நாட்டில் சாலொமோனின் ஆட்சிக்காலத்தில் தான் கொண்டுவரப்பட்டது. எதிரி நாடுகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள சாலோமோன் மிக வலுவான இராணுவக் கட்டமைப்பை உருவாக்கினார்.

12 நிர்வாகிகளை நியமித்து, 12 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒவ்வொருவர் வீதம் மன்னனின் அரண்மனைக்கு தேவையான பொருட்களை கொடுக்க வேண்டும் என்ற முறையை ஏற்ப்படுத்தினார். (1 இராஜாக்கள் 4:7)

அண்டை நாடுகளுடன் (எகிப்து, தீரு) நட்பு உடன்படிக்கைகளை ஏற்ப்படுத்தினார். சாலோமோனின் நாட்களில் போர் இல்லை என்று சொல்லும் அளவிற்கு அமைதியான முறையில் நாட்டை வழிநடத்தினார். தனக்கு எதிரிகளாய் இருந்தவர்களை, நாட்டை அழிக்க நினைத்தவர்களை கொலை செய்து, (யோவாப்) வளர்ச்சியின் பாதையில் நாட்டை கொண்டு சென்றார்.

வேற்று நாட்டவருடன் கொண்ட நட்புறுவின் காரணமாக, பல நாடுகளுக்கிடையே வணிக, வாணிப தொடர்பை சாலொமோன் ஏற்ப்படுத்தினார். இதன் மூலமாக தங்கள், வெள்ளி, வாசனைப் பொருட்கள், யானை தந்தங்கள், விலையுயர்ந்த மரங்கள் போன்றவற்றை வேற்று நாட்டவரிடமிருந்து இறக்குமதி செய்தார்.

சாலோமோனின் ஆட்சிக்காலத்தில் வெள்ளி எருசலேமில் கற்கள் போல காணப்பட்டது (1 இராஜாக்கள் 10:27) என்று சொல்லும் அளவிற்கு செல்வ செழிப்பின் உச்சகட்டத்திற்கு நாட்டை கொண்டு சென்றவர் சாலொமோன்.

சாலொமோன் மன்னன் கோவில் மட்டுமல்லாமல், அரண்மனைகள், அருங்காட்சியகங்கள், தோட்டங்கள், அரண்கள் போன்றவற்றையும் கட்டினார்.

சாலொமோனின் அறிவு முதிர்ச்சியினால் நீதிமொழிகள், சபை உரையாடல், இனிமை மிகு பாடல்கள் போன்ற இலக்கியப்புத்தகங்களையும் எழுதினார். இவ்விலக்கியங்களின் கருத்துக்கள் சாலொமோனின் அறிவு முதிர்ச்சியையும், நாட்டின் செழுமையை உலகநாடுகளுக்கு எடுத்துரைப்பனவாக அமைந்தது.

சாலொமோனின் புகழ் உலகம் முழுமைக்கும் பரவியது என்பதை, சேபா நாட்டு ராணி, சாலொமோனின் அறிவு முதிர்ச்சியை பார்க்க வந்தார் என்பதன் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. (1 இராஜாக்கள் 10)

சாலொமோனின் ஆட்சிக் காலத்தில் இஸ்ரவேல் நாடு பெரும் வலிமை மிக்க நாடாகவும், செழிப்பின் உச்சத்தை எட்டிய நாடாகவும் அமைந்தது.

5. இஸ்ரவேல் நாட்டின் வீழ்ச்சி:
இஸ்ரவேல் நாட்டை செழிப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்ற சாலோமோனின் இறுதி நாட்களிலேயே, நாடு கொஞ்சம் கொஞ்சமாக வீழ்ச்சியடைய தொடங்கியது.

சாலோமோன் தன் வாழ்வின் இறுதி நாட்களில், கடவுளின் கட்டளையை மறந்து, தன் மனைவிகளின் விருப்பத்திற்கு ஏற்ப அந்நிய தெய்வங்களுக்கு கோவில்கள் கட்டுதல், அவற்றை வழிபடுதல் போன்ற துணிகர பாவங்களை செய்தார். கடவுளின் திருச்சட்டங்களையும், இறைவாக்கினர்களின் எச்சரிப்பையும் புறக்கணித்தார். கடவுள் அவரை எச்சரித்தபோதும் அதை கண்டுகொள்ளாதவராக இருந்தார்.

சாலொமோனின் ஆட்சிக்காலத்தில் வட பகுதி மக்களான எபிராயீம், மனாசே, இசக்கார் குலத்தார் அரசியல் ரீதியாக புறக்கணிக்கப்பட்டவர்களாகவே இருந்தனர்.

இஸ்ரவேலின் வடக்கு பகுதியில் உள்ளவர்களுக்கும், தெற்க்குப் பகுதியில் உள்ளவர்களுக்கும் பண்பாட்டு அடிப்படையில் வேறுபாடுகள் அதிக அளவில் காணப்பட்டது. வடக்கு பகுதியில் உள்ளவர்கள் வேளாண்மை மற்றும் வணிகம் போன்ற தொழிலை செய்து வந்தனர். கோவில், இராணுவமையம், அரசு அலுவலகங்கள் அனைத்தும் தெற்கு பகுதியில் இருந்ததால், தெற்கு பகுதியில் உள்ளவர்கள் அது தொடர்பான பணிகளில் கூடுபட்டு வந்தனர்.

12 குலங்கள் அடங்கிய எருசலேம் நகருக்கு மையமாக விளங்கும் கோவில் தெற்கு பகுதியில் இருந்ததால், அது வடக்கு பகுதியில் உள்ளவர்களுக்கு பெரும் சிரமத்தைக் கொண்டு வந்தது.

இதுபோன்ற காரணங்களால், மக்களிடையே அரசரின் மீது ஓர் அதிருப்பதி ஏற்ப்பட்டது. சாலொமோனின் மறைவுக்குப் பின், மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, சாலோமோனின் மகன் ரெகொபெயாமிடம் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். ரெகொபெயாம் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றாததால், இஸ்ரவேல் நாடு வடக்கு நாடு, தெற்கு நாடு என்று இரண்டு பிரிவுகளாக பிரிந்து.

வடக்கு நாட்டில் பத்து குலங்களும், தெற்கு நாட்டில் யூதா, பென்யமீன் என்ற இரண்டு குலங்களும் இருந்தன. தெற்கு நாட்டிற்கு சாலொமோனின் மகன் ரெகொபெயாம் அரசனானார். வட நாட்டிற்கு யெரொபெயாம் அரசனானார். தெற்கு நாட்டிற்கு எருசலேம் தலைநகரமாகவும், வடக்கு நாட்டிற்கு சமாரியா தலைநகரமாகவும் மாற்றப்பட்டது. இப்படி இஸ்ரவேல் நாடு கி.மு. 930-ம் ஆண்டு இரண்டு பிளவுகளாக பிரிந்ததே, முடியாட்சி வீழ்ச்சியடைந்ததற்கு மிக முக்கிய காரணம் ஆகும்.

a) வடநாட்டின் வீழ்ச்சி
வடக்கு பகுதியில் உள்ள பத்து குலங்களுக்கு அரசனான யெரொபெயாம், தன் கட்டுப்பாட்டில் உள்ள மக்கள் கடவுளை தொழுதுகொள்ள தென்நாட்டில் உள்ள எருசலேம் நகரத்திற்கு சென்றால், தான் அரசியல் கட்டுப்பாட்டை இழந்துவிடுவோம் என்று பயந்து, வடநாட்டில் உள்ள பெத்தேல், தாண் என்ற இரண்டு இடங்களில் இரண்டு பொன்கன்றுக்குட்டிகளை செய்து, அதை வழிபடுமாறு கற்பித்தார்.

கோவிலில் பணிபுரியும் ஆசாரியப்பணியை லேவியர்கள் மாத்திரமே செய்ய வேண்டும் என்ற கடவுளின் கட்டளையை மீறி, அனைத்து குல மக்களையும் ஆசாரிய திருப்பணி செய்ய நியமித்தார் (1 இராஜாக்கள் 12:31), யாவேவின் கட்டளையை மீறி அந்நிய நாட்டாரைப்போல விழாக்களை ஏற்ப்படுத்துதல் (1 இராஜாக்கள் 12:32,33), கடவுளின் வாக்கையும், இறைவாக்கினர்களின் எச்சரிப்பையும் புறக்கணித்தல் போன்றவைகளால் நாடு கொஞ்சம் கொஞ்சமாக வீழ்ச்சியடைய தொடங்கியது.

வடநாட்டு அரசர் ஆகாப்பின் மனைவி யேசபேல் மூலமாக இஸ்ரவேல் நாடு மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தது. யேசபேல் சீதோனிய இளவரசி ஆவாள். அவள் மூலமாக சீதோனிய தெய்வங்களான பாகால் மற்றும் ஆசேராக் போன்ற தெய்வங்களுக்கென கோவில்கள் கட்டி அதை வழிபடுமாறு மக்களுக்கு போதித்தார். இச்செயல் கடவுளுக்கு மிகுந்த வேதனையை ஏற்ப்படுத்தியது. (1 இராஜாக்கள் 16:31-33)

இவ்வாறு இஸ்ரவேல் மக்கள் கடவுளின் திருச்சட்டத்தையும், இறைவாக்கினர்களின் வாக்கையும் புறக்கணித்து, கடவுளை காயப்படுத்தியதால், கடவுள் இஸ்ரவேல் நாட்டை அதாவது வடநாட்டை அசீரியர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார். கி.மு. 723-ம் ஓசேயா மன்னனின் நாட்களில் அசீரிய மன்னர் சல்மனேசர் வடநாடு முழுவதையும் கைப்பற்றினர். இவ்வாறு வடநாடு முழுவதும் வீழ்ச்சியடைந்தது.

b) தென்னாட்டின் வீழ்ச்சி:
தென்நாடு என்று அழைக்கப்படும் யூதா நாட்டை தாவீதின் வம்சத்தினர் ஆட்சி செய்து வந்தனர். இவர்களில் எசேக்கியா, யோசியா போன்ற சிறந்த ராஜாக்கள் இருந்தாலும், அநேக ராஜாக்கள் கடவுளுக்கு கோபமூட்டும் காரியங்களையே செய்து வந்தார்கள். குறிப்பாக மனாசே மற்றும் அவருக்குப் பின்வந்த அரசர்கள் கடவுளின் திருச்சட்டத்திற்கு மாறாக செயல்பட்டது, தென்நாட்டின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது.

மனாசே மன்னர் கடவுளின் கோவிலுக்குள் விக்கிரக வழிபாட்டை கொண்டு வந்ததோடு, குழந்தைகளை தீயில் பலியிடுதல், நாள்பார்த்தல், சூனியம் பார்த்தல் போன்ற கடவுள் வெறுக்கும் காரியங்களையும் செய்து வந்தார். தன்னை கண்டித்து இறைவாக்கு உரைத்த இறைவாக்கினர்களையும் கொலை செய்தார். (1 இராஜாக்கள் 21:16)

யோசியா ராஜா மிகச்சிறப்பாக ஆட்சி செய்தாலும், எகிப்தியரோடு நடைபெற்ற யுத்தத்தில் கொள்ளப்பட்டார். அவரைத்தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக தென்நாடு வீழ்ச்சியை சந்தித்தது.

யோயாக்கீம், யோயாக்கீன், சிதேக்கியா போன்ற மன்னர்கள் கடவுளை மறந்து, தங்களைக் காப்பாற்றிக்கொள்ள எதிரிநாட்டு மன்னர்களிடம் உதவி கேட்டது, அவர்களின் மீது நம்பிக்கொண்டது போன்ற காரணங்களும் தென்நாடு வீழ்ச்சியடைவதற்கு காரணமாக அமைந்தது,

கடைசியாக சிதேக்கியா மன்னர் பாபிலோனுக்கு விரோதமாக கிழற்ச்சி செய்ததால், கி.மு 586-ம் ஆண்டு பாபிலோனிய மன்னனர் நேபுகாத்நேச்சாரால் யூதா நாடு முழுவதும் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தது. நேபுகாத்நேச்சார் எருசலேம் நகரம் முழுமையையும், சாலொமோன் கட்டின கோவிலையும் இடித்து நகரத்தை நாசமாக்கினார்.

6) இஸ்ரவேல் நாட்டு முடியாட்சியினால் மக்களுக்கு கிடைத்த நன்மைகள்:
i)  நீதித்தலைவர்களின் காலத்தில் இஸ்ரவேலர்கள் 12 குலங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர், முடியாட்சியின் மூலமாக நாம் அனைவரும் ஒரு நாட்டினர் என்ற நாட்டு ஒற்றுமை உண்டானது.

ii) முடியாட்சியினால் எதிரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துகொள்ளும் வலிமை கொண்ட இராணுவம் தாவீது மற்றும் சாலொமோன் மன்னர்களால் கொண்டுவரப்பட்டது. குறிப்பாக தாவீது மன்னர் மூலமாக நாட்டின் எல்லைகள் விரிவுபடுத்தப்பட்டது.

iii) தாவீது, சாலோமோன் மன்னர்களின் நாட்களில் இஸ்ரவேல் நாடு வலுவான நிர்வாக அமைப்பு கொண்ட நாடாக உருவாகியது. சாலொமோனின் நாட்களில் வர்த்தங்கள், கட்டிடப்பணிகள், சர்வதேச உறவுகள் மூலமாக நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய உச்சத்தை அடைந்தது.

iv) நாட்டு மக்கள் அனைவரும் ஒரே மனதோடு, ஓரிடத்தில் கடவுளை வழிபடும் வாய்ப்பு கிடைத்து. (எருசலேம் கோவில்)

v) முடியாட்சியினால் நாட்டு மக்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற வலுவான சட்டம் உருவானது. எருசலேம் இராணுவ, நிர்வாக, கலாச்சார மையமாக உருவானது.

7) இஸ்ரவேல் நாட்டு முடியாட்சியினால் மக்களுக்கு ஏற்பட்ட தீமைகள்:
i) சாமுவேல் இறைவாக்கினர் எச்சரித்ததுபோலவே முடியாட்சியினால் மக்களின் நிலங்களும், விளைச்சல்களும் மன்னர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டன.

ii) சாலொமோனின் நாட்களில் கட்டிடப்பணிகள் அதிகம் நடைபெற்றதால் மக்களிடத்தில் அதிகபடியான வரி வசூலிக்கப்பட்டது. பொதுமக்கள் கட்டிப்பணிக்கு கட்டாயப்படுத்தப்பட்டனர்.

iii) பொதுமக்கள் கடவுளுக்கு கீழ்ப்படிந்து நடந்தாலும், சில மன்னர்களின் வெளிநாட்டு உறவுகளினால் வெளிநாட்டு வழிபாட்டு முறைகளும், தெய்வங்களும் இஸ்ரவேல் நாட்டிற்குள் நுழைந்தது.

iv) சாலொமோன் மன்னரின் வெளிநாட்டு மனைவிகளினால் இஸ்ரவேல் நாட்டிற்குள்ளும் சிலைவழிபாடு கொண்டுவரப்பட்டது. சாலொமோன் மன்னர் விக்கிரகங்களுக்காகவும் கோவில்கள் கட்டடினார்.

v) மனாசே போன்ற அரசர்களால் கடவுளின் கோவிலுக்குள்ளும் சிலைவழிபாடு கொண்டுவரப்பட்டது.

vi) ரெகொபெயாம் அரசனின் கடுமையான வரிச்சுமையால் ஒற்றுமையாய் இருந்த நாடு வடநாடு, தென்நாடு என்ற இரண்டு நாடுகளாக பிரிந்தது.

vii) சில அரசர்கள் கடவுள் மீது கொண்ட பற்றுறுதியை விட்டுவிட்டு, வேற்று மன்னர்களின் உதவியை நாடியதால், போரில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தார்கள்.

viii) அரசர்களிடத்தில் செல்வம் அதிகபடியாக சேர்க்கப்பட்டதால் நாட்டில் ஏழைகள் ஒடுக்கப்பட்டார்கள். (எ.கா ஏழை நாபோத், ஆகாப் ராஜா) இதைக்குறித்து ஓசியா, ஆமோஸ், ஏசாயா, எரேமியா போன்ற இறைவாக்கினர்கள் எச்சரிப்பையும் அரசர்கள் கண்டுகொள்ளவில்லை. இவைகளே முடியாட்சியினால் மக்களுக்கு ஏற்ப்பட்ட பாதிப்புகள் ஆகும்.

8) முடிவுரை:
இந்த கட்டுரையின் மூலமாக இஸ்ரவேல் நாட்டில் முடியாட்சி எப்படி உருவானது, எப்படி வளர்ச்சியடைந்தது, இஸ்ரவேல் நாட்டில் முடியாட்சி எப்போது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது, முடியாட்சியினால் பொதுமக்களுக்கு கிடைத்த நன்மைகள், பொதுமக்களுக்கு ஏற்ப்பட்ட பாதிப்புகளைக் குறித்து மிகத்தெளிவாக அறிந்துகொண்டோம்.

துணை நின்ற நூல்கள்: (Bibliography)
  • 1. இரா. எட்வர்ட் சாம், இஸ்ரவேலரின் வரலாறு: முதலாம் பாகம். மதுரை: தமிழ்நாடு இறையியல் நூலோர் குழு, 1966.
  • 2. ஞான. இராபின்சன், இஸ்ரவேலரின் சமயம். மதுரை: தமிழ்நாடு இறையியல் நூலோர் குழு, 1984. 
  • 3. சூ.ம. ஜெயசீலன், இஸ்ரயேல்: அகதிகளாய் அலைந்தவர்களின் வரலாறு. திண்டுக்கல்: வைகறை பதிப்பகம், 2016. 
  • 4. ஞா. அருள்ராஜ், திருவிவிலிய விளக்கம்: 1 & 2 குறிப்பேடு. திருச்சிராப்பள்ளி: அருள்வாக்கு மன்றம், மதுரை: தமிழ்நாடு இறையியல் நூலோர் குழு, 2006.
  • 5. ஸ்தேவான், யூதராஜ்யம் சிதைந்த காலம். திருநெல்வேலி: திருநெல்வேலி அத்தியச்சாதீன நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1994.
  • 6. ஸ்தேவான், ஐக்ய அரசும் அதன் சிதைவும். திருநெல்வேலி: திருநெல்வேலி அத்தியச்சாதீன நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1994.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.