இரண்டாம் உடன்படிக்கை நூல் இன்றைய திருச்சபைக்கும், சமுதாயத்திற்கும் கூறும் அறைகூவல்கள்
உள்ளடக்கம்
- 1. முன்னுரை
- 2. இரண்டாம் உடன்படிக்கை நூல்
- 3. நற்செய்தி நூல்
- 4. திருத்தூதுவர் பணிகள்
- 5. திருச்சபைக்கு பவுலின் மடல்கள்
- 6. தனிநபருக்கு பவுலின் மடல்கள்
- 7. பொதுவான சவால்கள்
- 8. திருவெளிப்பாடு
- 9. எனது கண்ணோட்டம்
- 10. முடிவுரை
I. முன்னுரை:
கிறிஸ்தவர்களின் புனித நூலான திருவிவிலியம் இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. அவை: முதல் உடன்படிக்கை, இரண்டாம் உடன்படிக்கை ஆகும். இரண்டாம் உடன்படிக்கையில் 27 புத்தகங்கள் உள்ளன. இந்த 27 புத்தகங்களும் இயேசு கிறிஸ்துவையும், திருச்சபையையும் மையப்படுத்தி எழுதப்பட்ட புத்தகங்களே. இந்த இரண்டாம் உடன்படிக்கை நூல் தற்கால திருச்சபைக்கும், சமுதாயத்திற்கும் கொடுக்கும் சவால்களைக் குறித்து இந்த குறிப்பில் அறிந்துகொள்வோம்.
II. இரண்டாம் உடன்படிக்கை நூலின் பிரிவுகள்:
இரண்டாம் உடன்படிக்கை நூலை
i) நற்செய்திகள்ii) திருத்தூதுவர் பணிகள்iii) பவுலின் மடல்கள்iv) பொதுவான மடல்கள்v) திருவெளிப்பாடு
என்று ஐந்து பிரிவுகளாக பிரிக்கலாம். இந்த பிரிவின் அடிப்படையிலேயே இரண்டாம் உடன்படிக்கை நூல் திருச்சபைக்கும் சமுதாயத்திற்கும் கொடுக்கும் சவால்களைக் குறித்து ஆராய்வோம்.
III. நற்செய்தி நூல்:
மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்ற நான்கு நூல்களும் நற்செய்தி நூல்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த நான்கு நூல்களும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, திருப்பணிகள், அருட்பணிகள், போதனைகள், பாடுகள், மரணம், உயிர்த்தெழுதலை அடையாளப்படுத்துகின்றது.
a) திருச்சபைக்குக் கொடுக்கும் சவால்கள்:
நற்செய்தி நூலில் எழுதப்பட்டுள்ள இயேசு கிறிஸ்துவின் அருட்பணிகள், திருப்பணிகள் அனைத்தும் ஏழைகள், சமுதாயத்தால் ஒடுக்கப்பட்டவர்களுக்கானதாகவே இருக்கிறது. ஆனால் தற்கால திருச்சபையின் அருட்பணிகளும், திருப்பணிகளும் செல்வம் படைத்தவர்களுக்காகவும், அதிகாரத்தில் உள்ளவர்களுக்காகவுமே இருக்கிறது.
நற்செய்தி நூலில் உள்ள இயேசு கிறிஸ்துவின் போதனைகள் அனைத்தும் அன்பு, கருணை, சேவை ஆகியவற்றை மையமாகக் கொண்டு இருக்கிறது. இயேசு கிறிஸ்து தான் போதித்ததின் படியே வாழ்ந்தும் காட்டினார். ஆனால் தற்கால திருச்சபையில் இயேசுவைப்போல அன்பு, கருணை, சேவை போன்றவைகள் போதிக்கப்படுகின்றன, ஆனால் போதிப்பவரும், கேட்பவர்களும் அதன்படி வாழ்வதில்லை.
இயேசு கிறிஸ்து ஊழல், பாகுபாடு, வறுமை, அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்தார். இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதிகளாக இருக்கும் தற்கால ஊழியர்கள் ஊழல், பாகுபாடு, பாலின வேறுபாடு, சமுதாய வேறுபாடு, அடக்குமுறை ஆகியவற்றிக்கு எதிராக குரல் கொடுப்பதைவிட்டுவிட்டு, சபையின் தலைவர்களே ஊழலிலும், அடக்குமுறைகளிலும் கூடுபடுகிறார்கள்.
பொய்களும், சுயநலமும், வன்முறையும் நிறைந்த உலகில் இயேசு கிறிஸ்து வழியும், வாய்மையும், வாழ்வும் நானே என்று வாக்குரைத்தார். இந்த உண்மையை வெளிப்படுத்தி சாட்சியாய் நிற்பது தற்கால திருச்சபையின் மிகப்பெரிய சவால் ஆகும்.
உன்னைப்போல பிரனையும் நேசி என்று சொன்ன இயேசு கிறிஸ்து, அதன்படியே வாழ்ந்தும் காட்டினார். தனக்கு துரோகம் செய்த யூதாசையும் நேசித்தார். தற்கால திருச்சபையில் பிறரையும் நேசிக்க வேண்டும் என்று போதிக்கப்படுகிறதே தவிற, திருச்சபை மக்களிடத்திலும், ஆயரிடத்திலும் கூட நேசிக்கும் பண்பு இல்லை.
இயேசு கிறிஸ்து தன்னிடம் வரும் எவருக்கும் விடுதலை கொடுப்பதை (வியாதி, வேதனை, கண்ணீர், மரணம்) நாம் நற்செய்தி நூல்களில் பார்க்கின்றோம். ஆனால் தற்கால திருச்சபையில் விடுதலை கொடுக்கிறோம், இறைவாக்கு உரைக்கிறோம் என்ற பெயரில் கோமாளித்தனங்கள் நடைபெறுவதை நாம் பார்க்க முடிகிறது.
இயேசு கிறிஸ்து கோவில்களில் அருளுரை ஆற்றியதைவிட, தெருக்களிலும், வீதிகளிலும் அருளுரை ஆற்றியதே அதிகம். ஆனால் தற்கால அருட்பணியாளர்கள் குளிரூட்டப்பட்ட அரையில் அமர்ந்து கொண்டு அருட்பணியாற்றவே விரும்புகின்றனர்.
b) சமுதாயத்திற்குக் கொடுக்கும் சவால்கள்
லூக்கா நற்செய்தியாளர் இயேசு கிறிஸ்து ஏழைகள், விதவைகள், பாவிகள், பிற இனத்து மக்களுக்கு அதிக அக்கறை எடுத்துக்கொண்டதை எடுத்துக்காட்டுகிறார். ஆனால் தற்கால சமுகத்தில் ஏழைகள், விதவைகள், தலீத் இன மக்கள் முற்றிலுமாக ஒதுக்கப்படுகிறதை, ஒடுக்கப்படுகிறதை நாம் பார்க்க முடிகிறது.
எதிரிகளிடத்தில் அன்பு காட்டுங்கள், துன்பப்படுத்துகிறவர்களுக்காக இறைவேண்டல் செய்யுங்கள் என்று இயேசு கற்பித்தார் (மத்தேயு 5:44). ஆனால் தற்காலத்தில் தனக்கு எதிராக செயல்படுகிறவர்களை எப்படி பழிவாங்க முடியும் என்றே மக்கள் சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்.
4. திருத்தூதுவர் பணிகள்:
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்பு, அவர் விட்டுச் சென்ற திருப்பணியை, அருட்பணியை திருத்தூதுவர்கள் எப்படி உலகம் முழுமைக்கும் கொண்டு சென்றார்கள் என்பதே திருத்தூதுவர் பணிகள் நூலின் கதைச்சுருக்கம் ஆகும். திருத்தூதுவர் பணிகளின் மைய திருமொழி 1:8. தூய ஆவியை பெற்றுக்கொண்ட சீடர்கள் முன்பு எருசலேமிலும், பின்பு யூதேயாவிலும், அதனைத் தொடர்ந்து சமாரியாவிலும், கடைசியாக உலகம் முழுமைக்கும் நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்ற இந்த திருமொழிக்கு ஏற்றவாரே, திருத்தூதுவர் பணிகள் 28-ம் பிரிவில் நற்செய்தி ரோமாபுரிக்கு சென்றதோடு திருத்தூதுவர் பணிகள் நிறைவடைகிறது. அந்த நாட்களில் உலக வல்லரசு நாடாக விளங்கின ரோம் நகருக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டது என்றால், அது முழு உலகிற்கும் நற்செய்தி சென்றடைந்ததற்கான அடையாளமே.
a) திருச்சபையின் சவால்கள்:
திருத்தூதுவர்களின் நாட்களில் செய்யப்பட்ட அருட்பணிகள், திருப்பணிகளில் ஒரு சதவீதமேனும் தற்காலத்தில் நடைபெற்ற வில்லை என்பது நாம் அறிந்த உண்மையே.
ரோம அரசு எதிர்ப்பு தெரிவித்த போதிலும், திருத்தூதுவர்கள் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை குறித்து அச்சமின்றி அறிவித்து வந்தனர். (திருத்தூதுவர்கள் பணிகள் 4:20) எதிர்ப்புகளும், கலாச்சார தடைகளும், மதவாதமும் நிறைந்த இந்நாட்களில் திருச்சபையை தைரியமாய் வெளிப்படைத்தன்மையோடு நடத்துவது, சவால் நிறைந்ததாகவே உள்ளது.
திருத்தூதுவர்கள் அனைத்தையும் பொதுவாய் வைத்து அனுபவித்தார்கள். தங்களுடைய நிலங்களையும், உடைமைகளையும் விற்று, அனைவருக்கும் தேவையானதற்குத் தக்கதாக பகிர்ந்து கொண்டார்கள். (திருத்தூதுவர் பணிகள் 2:44,45) ஆனால் தற்காலத்தில் சபையாரிடம் கொடுக்கும் உள்ளமும் குறைந்து விட்டது, சபையார் கொடுத்த திருப்பணிக்கொடைகளை சரியான முறையில் பயன்படுத்தும் திருச்சபைத் தலைவர்களும் குறைந்துவிட்டார்கள். திருச்சபையின் சொத்துக்களை சுரண்டும் திருச்சபை தலைவர்கள் இன்று பெருகிவிட்டார்கள்.
b) சமுதாயத்திற்குக் கொடுக்கும் சவால்கள்:
திருத்தூதுவர்கள் கால சமுதாயத்தில் பல்வேறு பிளவுகள் காணப்பட்டாலும், திருத்தூதுவர்கள் பிளவுகளைக் கடந்து (யூதர், சமாரியர், கிரேக்கர், புற ஜனத்தார்) ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள். இக்கால சமுதாயமும் ஏழை, பணக்காரர், உயர்ந்தவர் தாழ்ந்தவர், படித்தவர், படிப்பறிவற்றவர் போன்ற பல்வேறு நிலைகளில் பிளவுபட்டு இருப்பதை நாம் பார்க்க முடிகிறது.
திருத்தூதுவர்கள் சத்தியம், சேவை, அன்பு, நட்புறவு கொண்ட சமத்துவ சமுதாயத்தை உருவாக்கினர். ஆனால் சமுகத்தில் இன்று ஒற்றுமையாய் வாழும் மனிதர்களும் போட்டி, பொறாமையின் நிமித்தமாக பிரிந்து கிடப்பதை நாம் பார்க்க முடிகிறது.
5. திருத்தூதுவர் பவுல் சபைகளுக்கு எழுதின கடிதங்கள்:
கிறிஸ்தவர்களை துன்பப்படுத்திக் கொண்டிருந்த சவுல் எனப்பட்ட பவுலை இயேசு சந்தித்த மாத்திரத்தில், கிறிஸ்துவின் நற்செய்தியை உலகெங்கும் எடுத்துரைக்கும் திருத்தூதுவராக மாறினார். யூதர்களுக்கும், இஸ்ரவேலர்களுக்கும் மாத்திரமே நற்செய்தி அறிவிக்கப்பட்டுக் கொண்டிருந்த நாட்களில் புற ஜனமக்களுக்கு நற்செய்தியை கொண்டு சென்ற பெருமை பவுலையே சாரும்.
பவுல் மூன்று அருட்பணி பயணங்களை மேற்கொண்டார் என்று திருத்தூதுவர் பணிகள் நூலில் பார்க்கிறோம். இப்பயணத்தின் போது இவர் அநேக நாடுகளுக்கு சென்று கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்தார். அங்கு சபையையும் நிறுவினார். அந்த சபைகளில் குலப்பங்கள், பிரச்சனைகள் ஏற்பட்ட போது, அவைகளுக்கு தீர்வு கொடுக்கும் விதமாக பவுல் அந்தத்த சபைகளுக்கு கடிதங்கள் எழுதினார். இவ்வாறு பவுல் திருச்சபைக்கு எழுதிய கடிதங்களில் ஒன்பது கடிதங்கள் திருமறையில் இடம்பெற்றுள்ளன. பவுல் திருச்சபைக்கு எழுதிய கடிதங்கள் இந்த ஒன்பது மட்டும் தானா? இந்த ஒன்பது கடிதங்களையும் பவுல் தான் எழுதினாரா? என்ற பல விவாதங்கள் இன்று வரை இருந்து கொண்டு தான் இருக்கிறது.
திருமறையில் ரோம், கொரிந்து, கலாத்தியா, எபேசு, பிலிப்பி, கொலோசே, தெசலோனிக்கே ஆகிய பட்டணங்களுக்கு பவுல் எழுதிய கடிதங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் கொரிந்து, தெசலோனிக்கே சபைகளுக்கு பவுல் இரண்டு கடிதங்கள் எழுதியது குறிப்பிடத்தக்கது.
a) திருச்சபையின் சவால்கள்:
கொரிந்து திருச்சபையில் பிரிவுகள், போட்டிகள், ஒழுக்கக்கேடுகள் (பரத்தமை) ஆகியவை காணப்பட்டமையால் திருச்சபையார் அவைகளைவிட்டு விலகி, கடவுளின் சித்தம் அறிந்து செயல்படவேண்டும் என்று கண்டித்து உரைக்கிறார் பவுல். பவுலின் இக்கடிதம் இக்கால திருச்சபைக்கும் மிகவும் இன்றியமையாதவையாகவே இருக்கின்றன. கொரிந்து சபையில் இருந்த அனைத்து பாவங்களும், தற்கால திருச்சபையிலும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.
தெசலோனிக்கே திருச்சபையினர் கடவுளின் இரண்டாம் வருகையைக் குறித்த தெளிவு இல்லாமல் இருந்த போது, பவுல் இரண்டாம் வருகையைக் குறித்த தெளிவான விளக்கமாக தெசலோனிக்கேயர் நிருபத்தை எழுதுகிறார். இது இக்கால திருச்சபையில் உள்ள விசுவாசிகளுக்கும், ஏற்றதாகவே இருக்கிறது.
b) சமுதாயத்தின் சவால்கள்:
பவுல் ரோமாபுரிக்கு எழுதும்போது, எல்லோரும் பாவம் செய்து கடவுளின் மகிமையை இழந்து போனார்கள் (ரோமர் 3:23) என்றும், பாவத்தில் விழுந்த மக்கள் இறையாட்சிக்குள் நுழைய தூய ஆவி அருளும், நீதி, அமைதி, மகிழ்ச்சி வேண்டும் என்றும் எழுதுகிறார் (ரோமர் 14:17). இக்கால சமுதாயமும், கடவுள் வெறுக்கும் தீமைகளை விட்டுவிட்டு, தூய ஆவியார் அருளும் நீதியோடும், அமைதியோடும், மகிழ்ச்சியோடும் வாழ சவால் விடுகிறார் பவுல்.
அனைவரிடமும் நாம் அன்பு காட்ட வேண்டும். அன்பினால் மாத்திரமே எல்லாவற்றையும் செய்ய முடியும் என்று பவுல் கொரிந்து சபைக்குக் கூறிய கருத்து, இக்கால சமுதாயத்திற்கு மிகவும் இன்றியமையாத கருத்தாகும். அன்பு மனிதர்களிடத்திலே குறைந்து கொண்டு வருவதால், சக மனிதனை மனிதனாக பார்க்காமல், இழிவாக பார்க்கும் மனிதர்களும் இச்சமுதாயத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.
பிலிப்பி பட்டணத்தார் மிகவும் ஏழ்மை நிலையில் வாழக்கூடியவர்கள். தங்களின் எதிர்காலத்தை நினைத்து கவலைப்படும் அவர்களைப் பார்த்து பவுல், ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள் (பிலிப்பியர் 4:4) என்று எழுதுகிறார். நாமும் நம்முடைய வாழ்வின் பிரச்சனைகளைக் காட்டிலும், கடவுள் பெரியவர் என்ற தைரியத்தோடு, என்றும் மகிழ்ந்திருக்க பவுல் சவால் விடுகிறார்.
6. திருத்தூதுவர் பவுல் தனிநபருக்கு எழுதின கடிதங்கள்:
திருத்தூதுவர் பவுல் தனிநபர்களுக்கு அநேக கடிதங்கள் எழுதியிருந்தாலும், அவற்றுள் மூன்று நபர்களுக்கு எழுதிய கடிதங்கள் வேதத்தில் இடம்பெற்றுள்ளன. அவைகள்: தீமோத்தேயு, தீத்து, பிலெமோன். தீமோத்தேயு என்ற நபருக்கு பவுல் இரண்டு கடிதங்கள் எழுதியது குறிப்பிடத்தக்கது.
இவர்களில் தீமோத்தேயு, தீத்து ஆகிய இருவரும் அருட்பணியாளர்கள். தீமோத்தேயு இளம் வளது அருட்பணியாளர், தீத்து முதிர்வயது அருட்பணியாளர். இவர்கள் கடவுளின் திட்டத்தையும், செயல்பாடுகளையும் அறிந்து நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்பதற்காக, அருட்பணியாளர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று மிகத் தெளிவாக, ஆழமாக பவுல் எழுதுகிறார். இவ்விரண்டு நூல்களும் இன்று அருட்பணி செய்பவர்களுக்கும் சவால் நிறைந்ததாகவே இருக்கிறது.
ஒநேசிமு என்ற ஒரு மனிதர் தன் தலைவனை விட்டு, ஓடிச்சென்றார். அந்த ஒநேசிமு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பின்பு, அவர் தலைவரோடு இணைந்து இருப்பதற்காக, தலைவர் பிலெமோனுக்கு ஓர் பரிந்துரைக்கடிதத்தை பவுல் எழுதுகிறார். அக்கடிதமே பிலெமோன் கடிதம்.
a) திருச்சபைக்குக் கொடுக்கும் சவால்கள்:
திருத்தூதுவர்களாகிய தீமோத்தேயுவும், தீத்துவும் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்விலும், குடும்ப வாழ்விலும் சமுதாய வாழ்விலும் எப்படி வாழ்ந்தார்கள் என்று நமக்குத் தெரியாது. ஆனால் தீமோத்தேயு, தீத்து ஆகிய இக்கடிதங்களில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் இக்கால அருட்பணியாளர்களுக்கு மிகவும் முக்கியமான, ஆழமான சட்டங்களை எடுத்துரைக்கின்றது. ஒவ்வொரு அருட்பணியாளரும் இச்சட்டத்தின் படி வாழ அழைக்கப்படுகிறார்கள்.
b) சமுதாயத்திற்குக் கொடுக்கும் சவால்கள்:
ஒநேசிமு என்பவரை மீண்டுமாய் தன்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுமாறு, ஓர் பரிந்துரைக் கடிதமாக பவுல் பிலேமோனுக்கு எழுதுகிறார். இது திருச்சபையில் மாத்திரம் அல்ல, ஒரு தனி மனிதனுடைய வாழ்விலும் பவுல் கொண்டுள்ள கரிசனையைக் காட்டுகிறது. இக்கால அருட்பணியாளர்களும் திருச்சபையில் மாத்திரம் அல்ல, சமுதாயத்தின் மீதும், ஒடுக்கப்பட்டவர்கள் மீதும் கரிசனையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது.
7. பொதுவான கடிதங்கள்:
பொதுவான கடிதங்கள் என்பது திருத்தூதுவர் பவுலைப் போல மற்ற திருத்தூதுவர்களும் கடிதங்கள் எழுதியுள்ளனர். அப்படி எழுதப்பட்ட எழுத்தாளர்களில் ஐந்து நபர்களுடைய கடிதங்கள் மாத்திரம் விவிலியத்தில் இடம் பெற்றுள்ளன. அந்த எழுத்தாளர்கள் யாக்கோபு, பேதுரு, யோவான், யூதா ஆவர்.
எபிரெயர் கடிதம் யார் எழுதினார் என்பதற்கான சரியான விளக்கம் இல்லை. சிலர் அதை பவுல் எழுதினார் என்று நம்புகிறார்கள். பேதுரு எழுதிய இரண்டு கடிதங்களும், யோவான் எழுதின மூன்று கடிதங்களும் புதிய உடன்படிக்கை நூலில் இடம் பெற்றுள்ளன.
a) திருச்சபைக்குக் கொடுக்கும் சவால்கள்:
பற்றுறுதியானது வெறும் வார்த்தைகளினால் மட்டும் இல்லாமல் செயல்களில் வெளிப்பட வேண்டும் என்று யாக்கோபு வலியுறுத்துகிறார். (யாக்கோபு 2:17). இக்கால திருச்சபையிலும் வார்த்தையினால் கடவுளை வெளிப்படுத்தும் அருட்பணியாளர்களும், விசுவாசிகளும், செயல்களினால் கடவுளை வெளிப்படுத்த அழைக்கப்படுகிறோம்.
கிறிஸ்துவை கடவுள் இல்லை என்று சொல்லும் போலி அருட்பணியாளர்களுக்கு எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்று யோவான் வலியுறுத்துகிறார். அதேபோல, அருட்பணியாளர்களின் தவறான போதனைகளைக் குறித்து எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்று யூதா வலியுறுத்துகிறார். இக்கால திருச்சபைத் தலைவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் பலரும், கிறிஸ்து கடவுள் இல்லை என்றும், தவறான போதனைகளை மக்கள் மனதில் புகுத்தியும் வருகிறார்கள். இவர்களுக்கு திருச்சபை எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.
b) சமுதாயத்திற்குக் கொடுக்கும் சவால்கள்:
அதிகாரிகளுக்கும், அதிகாரத்திற்கும் கீழ்ப்படிய வேண்டும் என்றும், (1 பேதுரு 2:13) வாழ்வின் தனி ஒழுக்கம் மிகவும் முக்கியமானது என்றும் பேதுரு வலியுறுத்துகிறார். இது இக்கால சமுதாயத்திற்கு ஓர் சவாலாகவே உள்ளது.
வெறுப்பு, பகை, வன்முறை நிறைந்த சமுதாயத்தில் அன்பை நிலைநாட்ட வேண்டும். சத்தியத்தையும், உண்மையையும் காக்க வேண்டும் என யோவான் எழுதுகிறார். இக்கால சமுதாயமும் இப்படிப்பட்ட சமுதாயமாகவே உள்ளது, நாம் சத்தியத்தோடும், உண்மையோடும் வாழ்ந்து வருகிறோமா? சிந்திப்போம்.
8. திருவெளிப்பாடு:
கடைசி நாட்களில் உலகில் நடைபெறும் காரியங்களை கடவுள் யோவான் என்ற திருத்தூதுவருக்கு வெளிப்படுத்தியவைகளே திருவெளிப்பாடு என்ற நூல்.
ஏழு சபைகளுக்கு செய்தி, விண்ணரசு பற்றிய கனவு, ஏழு முத்திரைகள், பாபிலோனிய வீழ்ச்சி, கிறிஸ்துவின் வெற்றி, புதிய வானம் புதிய பூமி ஆகியவை இந்நூலில் முக்கிய பகுதிகளாகும்.
திருவெளிப்பாடு நூல் தீமை தோற்கும், கிறிஸ்து வெற்றி பெறுவார், கடவுளின் மக்கள் நித்திய மகிழ்ச்சியில் வாழ்வார்கள் என்பதை ஆழமாக வலியுறுத்துகிறது.
a) திருச்சபைக்குக் கொடுக்கம் சவால்கள்:
திருவெளிப்பாடு நூல் திருச்சபையார் துன்பத்திலும் பற்றுறுதியில் நிலைத்திருக்க வேண்டும் என்றும், சத்தியத்திற்காய் சாட்சியாய் வாழ வேண்டும் என்றும், போதிக்கிறது.
b) சமுதாயதத்றிகுக் கொடுக்கும் சவால்கள்:
திருவெளிப்பாடு நூல் ஊழல், வன்முறை, சுரண்டல் ஆகியவற்றை மறுத்து நீதியில் நிலைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. புதிய எருசலேமில் அனைத்து பிரிவினருக்கும் இடம் உண்டு (திருவெளிப்பாடு 21,22) என்ற கருத்து, பாகுபாடு இல்லாமல் அனைவரையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதைக் காட்டுகிறது.
9. எனது கண்ணோட்டம்:
இரண்டாம் உடன்படிக்கை நூல் கிறிஸ்துவை மையப்படுத்தின ஓர் நூல். இதன் தலைவர் கிறிஸ்துவே. கிறிஸ்து அதிக இடங்களில் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக, ஏழைகளின் தோழனாக, புறக்கணிக்கப்பட்டவர்களை சேர்த்துக்கொள்பவராகவே புதிய உடன்படிக்கையில் காட்டப்படுகிறார்.
கிறிஸ்துவைப்போல நாமும் ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்களோடு நம்மை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
10. முடிவுரை:
இந்த கட்டுரையில் புதிய உடன்படிக்கை நூலின் மையக்கருத்துக்களையும், திருச்சபைக்கும், சமுதாயத்திற்கும், புதிய உடன்படிக்கை நூல் கொடுக்கும் சவால்களைப் பற்றியும் அறிந்து கொண்டோம்.
துணை நின்ற நூல்கள்:
- எல். தாண், ஜோசப். புதிய ஏற்பாடு விளக்கவுரை. திருவிலிப்புத்தூர்: நற்செய்திப் பதிப்பகம்.
- மக்களாஷன், இராபின். நற்செய்தி நூல்களும் திருத்தூதுவர் செயல்களும்: The Gospels and the Acts of the Apostles. Madras: Printed at the Diocesan Press, 1979.
- தமிழ் ஆய்வு வேதாகமம். சென்னை: இந்திய பைபிள் இலக்கியம், 2023
