Type Here to Get Search Results !

Reception Prayer | வரவேற்பு இறைவேண்டல் | Jesus Sam

I. வரவேற்பு இறைவேண்டல்
விவிலிய மறைப்பகுதி
திருப்பாடல் 128

இறைவேண்டல் 
எங்கள் தாயும், தந்தையுமாகிய கடவுளே. நீர் தந்த இந்த புதிய நாளுக்காக, இந்த நாளின் காலைப் பொழுதிற்காக உமக்கு நன்றி படைக்கின்றோம். கடந்த இரவிலும் நல்ல நித்திரையைத் தந்து, இந்த காலைப் பொழுதில் உம்மை நோக்கிப் பார்க்கும்படியாக நீர் கொடுத்த நல்ல வாய்ப்பிற்காக உமக்கு நன்றி படைக்கின்றோம். இப்புதிய நாளில் -நாங்கள் எடுக்கும் அனைத்து முயற்ச்சிகளையும் கடவுள் நீர் வாய்க்கச்செய்வீராக என்று உம்மிடம் மன்றாடுகிறோம். உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! என்ற திருமொழிக்கு இணங்க இந்த நாளில் நீர் எங்களை நேர்த்தியாய் நடத்தும்படியாய் உம்மிடம் மன்றாடுகிறோம். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாய், ஒருமனப்பாட்டின் சிந்தையோடு எங்கள் கடமைகளை செவ்வனே செய்து முடிக்க அருள்புரியும். இந்த நாளில் தொடக்கம் முதல் நிறைவு மட்டுமாய் உம்முடைய கரம் எங்களை தாங்கி ஏந்தி வழிநடத்தட்டும். இவையனைத்தையும் மீட்பர் பாதம் பணிந்து கெஞ்சுகிறோம், எங்கள் பெற்றவராம் கடவுளே. ஆமென்.



II. வரவேற்பு இறைவேண்டல்
தொடக்க இறைவேண்டல்
எங்கள் பெற்றவராம் கடவுளே, இந்தக் காலைப் பொழுதில், பணியாளர்களாய் உம் திருமுன் கூடிவரவும், உம்மைத் தொழுதுகொள்ளவும் நீர் பாராட்டின அருளுக்காய் உமக்க நன்றி படைக்கின்றோம். எங்களோடு நீர் இடைபடுவீராக. மீட்பரை பணிந்து மன்றாடுகின்றோம் பெற்றவராம் கடவுளே. ஆமென்.

விவிலிய மறைப்பகுதி
திருப்பாடல் 15

இறைவேண்டல்
எல்லா நன்மைகளுக்கும் ஊற்றும் உரைவிடமுமாய் இருக்கும் எங்கள் தாயும், தந்தையுமாகிய மூவொரு கடவுளே. இந்த நாளில் எங்கள் பணிகளை நாங்கள் துவங்கும் முன்பதாக உம்மைத் தொழுதுகொள்ளும்படியான நல்லதொரு வாய்ப்பை நீர் ஏற்படுத்திக்கொடுத்ததற்காக உமக்கு நன்றி படைக்கின்றோம். நீங்கள் எங்களை நம்பிக் கொடுத்த பொறுப்புக்களை உண்மையோடும், உத்தமத்தோடும் நிறைவேற்ற அருள்புரியும். பருகால மாற்றங்களால் ஏற்படுகின்ற நோய்கள், பெலவீனங்களிலிருந்து எங்களைக் காத்து, உமது பெலத்தினால் ஒவ்வொரு நாளும் எங்களை தாங்கி, ஏந்தி வழிநடத்தும்படியாய் உம்மிடம் மன்றாடுகின்றோம். உமது பாதுகாப்பின் கரம் எங்களோடு இருந்து வழிநடத்தும்படியாய் மன்றாடுகின்றோம். இவையனைத்தையும் இறைமகன் இயேசு கிறிஸ்துவின் வழியே கெஞ்சி மன்றாடுகின்றோம் எங்கள் பாதுகாவளராம் கடவுளே. ஆமென்.


III. தொடக்க இறைவேண்டல்
ஆண்டவரே ஒவ்வொரு நாளும் என்னைத் தாங்குவதற்காக நன்றி நீரே என் மீட்பாகவுமிருக்கின்றீர். உம் திருப்பெயர் என் செயல்களினால் போற்றிடப் பெறுமாறு அமைந்திட அருள்வீராக ஆமென்.

மானுடர் மீது பேரன்பு கொண்ட எங்கள் தாயும் தந்தையுமாகிய கடவுளே, நன்றி நிறைந்த உள்ளத்தோடு இந்தக் காலைப்பொழுதில் உம் திருமுன் கூடிவர நீர் பாராட்டின அருளுக்காக உமக்கு நன்றி படைக்கின்றோம். இம்மட்டுமாய் எங்களைத் தாங்கி ஏந்தி சுமந்த உம் பேரன்புக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். நெருக்கடியான வேலையில் நான் ஆண்டவரை நோக்கி மன்றாடினேன்; ஆண்டவரும் எனக்குச் செவி கொடுத்து என்னை விடுவித்தார் என்ற திருமொழியின் படி எங்களின் நெருக்கடியான சூழலில் எங்களின் மன்றாட்டைக் கேட்டு, எங்களை விடுவித்தருளும். இந்த நாள் முழுவதும் நாங்கள் செய்யும் அனைத்துப் பணிகளை நீர் பொறுப்பெற்று நடத்தும்படியாய் மன்றாடுகிறோம். இவையனைத்தும் இறைமகன் இயேசு கிறித்துவின் வழியே இறைஞ்சுகிறோம் எங்களின் பேரன்புமிக்க இறையே. ஆமென்.


IV. வரவேற்பு இறைவேண்டல்
அன்பின் கடவுளே, நீ தந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி படைக்கின்றோம். இம்மன்றாட்டின் நேரத்தில் உம் இருத்தல் நிலையை உணர அருள் புரியும். மீட்பர் பாதம் பணிந்து கேட்கிறோம் அன்பின் கடவுளே. ஆமென்.

திருமறைப் பகுதி: 
திருப்பாடல்கள் 103:1-11 

இரக்கமும், அருளும், நீடிய பொறுமையும், பேரன்பும் கொண்ட எங்கள் தாயும் தந்தையுமாகிய கடவுளே, எங்கள் வாழ்நாளை நலன்களால் நிறைவுற செய்பவரே, உமக்கு நன்றி செலுத்துகின்றோம். இந்த நாளில் நாங்கள் ஏறெடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் உம்முடைய இருத்தல் நிலையை உணர, உம்முடைய பாதுகாப்பை உணர அருள் புரியும். எங்கள் கடமைகளை உண்மையோடும் உத்தமத்தோடும் நிறைவேற்ற அருள் தாரும். எங்களுக்கு வேண்டிய வலிமையையும், ஆற்றலையும் தந்து வழி நடத்தும். இவையனைத்தையும் இறைமகன் இயேசு கிறித்துவின் வழியே இறைஞ்சுகின்றோம் எங்களின் பேரன்புமிக்க இறையே. ஆமென்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.