Type Here to Get Search Results !

ஞாயிறு வழிபாடு 2026 | Jesus Sam | அருட்பணி முனைவர். ஆட்லின் ரெஜினாபாய் | Jesus Sam

தமிழ்நாடு இறையியல் கல்லூரி,
அரசரடி, மதுரை 16.

ஞாயிறு வழிபாடு

நாள்: 18.01.2026
நேரம்: மாலை 6.00 மணி
இடம்: கிறிஸ்தரசர் வழிபாட்டுமனை

அருட்பணி முனைவர். ஆட்லின் ரெஜினாபாய்
ஐக்கிய குழுவினர்
தமிழ்நாடு இறையியல் கல்லூரி


1. வாழ்த்துலும் தொடக்க இறைவேண்டலும்

2. வழிபட அழைப்பு
ஆணையும், பெண்ணையும் ஒன்றாகப் படைத்து படைப்பில் தம் நீதியை வெளிப்படுத்தியவர் நமது தாயும் தந்தையுமாகிய கடவுள்.

ஏழைகளாக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையும். மனம் உடைந்து சோர்ந்து போனவர்களுக்கு மகிழ்ச்சியையும். ஒடுக்குதலிலிருப்போருக்கு விடுதலையையும் யார் உண்மையில் பாவிகள்? யார் உண்மையில் மனந்திரும்ப வேண்டும்? என்று அறிவித்துச் செயல்படுத்தியவர் இயேசு.

பாடுபடும் மக்களோடு இணைந்து தாமும் அவர்களில் ஒருவராகப் போராடுபவர் பரிசுத்த ஆவியர் இந்த மூவொரு கடவுளை வழிபடுவோம் வாரீர்.

3. மூவொரு கடவுளைப் புகழ்ந்து பாடுவோம்
அலங்கார வாசலாலே (பாமாலை பாடல் எண்: 15)

4. ஆயர் அழைப்பு
இது கடவுள் உண்டு பண்ணின நாள் இதிலே அகமகிழக்கடவோம்.

பிரதிநிதி: ஆதிக்க சாதியினராலும் ஆணாதிக்கத்தினாலும் தலித் மக்கள் காவல்துறையினராலும், கொடுமைக்குள்ளாகி வாழ்வை இழந்துகொண்டிருக்கும்போது நாம் எப்படி கடவுளில் களிகூர்ந்து மகிழ்வது.

ஆயர்: இச்சூழலில் நாம் என்ன செய்ய வேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கிறார் என்பதற்கு கடவுளின் திருவார்த்தைகளைக் கேட்போம்.

5. திருமறைப் பாடம் வாசித்தல்:
திருமறைப்பாடம்
1. இணைச்சட்டம் 18:15-22

சிறப்புப் பாடல்

2. உரோமையர் 12:6-16

சிறார்களின் சிறப்பு நிகழ்வுகள்

3. மாற்கு 2: 18-22


6. அருளுரை:

7. பாவ அறிக்கைக்கான அழைப்பு:
ஆயர்: ஆதிக்க சமய சாதிய பொருளாதார அரசியல் பாலியல் ரீதியான ஒடுக்குதலுக்கு உள்ளாகி தீக்கிழைக்கப்பட்டவர்கள் மன்னிப்பை தராமல் கடவுள் நம்மை மன்னிக்க மறுக்கின்றார். ஆகவே முதலாவது நாங்கள் உங்களிடம் மன்னிப்பை பெற விரும்புகிறோம். நீங்களும் சாதிய ஆண் பெண் வசதிபடைத்தவர்கள் வறுமையில் உழல்வோர் என்ற பாகுபாடுகளைக் கடந்து சென்று நமது ஒற்றுமையை கிறிஸ்துவிடம் உறுதி செய்ய ஒருவரிடம் ஒருவர் மன்னிப்பைத் தேடுவோம்.

அமைதி

8. பாவ அறிக்கை :
1. முதல் பாவ அறிக்கை
பிரியமானவர்களே நான் என்னுடைய ஆயர் பணியை பணிக்கான அழைப்பு என்று உணராமல் ஆதிக்கம் செலுத்துவதற்கும். அதிகாரம் செலுத்துவதற்குரிய உரிமையாக ஏற்று நடந்துகொண்டமைக்கு உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். ஆசாரியத்துவம் அனைத்து மக்களுக்கு உரியது என்பதற்கு தடையாய் இருந்ததற்காகவும் உங்களைக் காட்டிலும் தூய்மையில் சிறந்தவராய் கடவுளின் ஒரே காட்டிக்கொண்டமைக்காக உங்களிடமும் மன்னிப்பைக் கேட்கிறேன். பிரதிநிதியாய் கடவுளிடமும்

மக்கள் பாவ மன்னிப்பு வழங்குதல்
உங்கள் மனம் திரும்புதல் எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. கடவுள் உங்களை மன்னிக்கிறார் நாங்களும் உங்களை மன்னிக்கிறோம். நாம் அனைவரும் இயேசு கிறிஸ்து ஒரே பிரதான தலைமை ஆயராகப் பணி செய்ய வந்தார் என்பதையும் சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட மக்களோடு தன்னை இணைத்துக்கொண்டு பணி செய்து தன்னுடைய உயிரையும் பலியாகக் கொடுத்தார் என்பதையும் நினைவு கூர்ந்து நாம் அனைவரும் இறைமக்களாக வாழ கடவுள் அருள்செய்வாராக.

2. இரண்டாம் பாவ அறிக்கை
எங்களின் சகோதர சகோதரிகளே எங்கள் வீடுகளிலும் பணித்தளங்களிலும் அடிமை வேலை செய்பவர்களாக மட்டுமே. உங்களை பயன்படுத்தி வந்தோம். சமூக அரசியல் பண்பாட்டு தளங்களில் நடந்த ஒடுக்குதலுக்கு நாங்கள் உடந்தையாக இருந்திருக்கின்றோம்.சாதியை திருமணங்களை எங்கள் சொந்த சாதிக்குள்ளாகவே நடத்தி வந்திருக்கின்றோம். சமுதாய அமைப்புகளை சாதகமாக்கிக்கொண்டு மனம் திருந்த காலம் தாழ்ந்தினோம். எங்களின் இந்த நிலைக்காக உங்களிடம் மன்னிப்புக் கேட்கின்றோம்.

மக்கள் பாவ மன்னிப்பு வழங்குதல்
சகோதர சகோதரிகளே உங்களுடைய மனம்திரும்புதல் உங்களுக்கு பெரும் மகிழ்ச்சி தருகிறது. எங்களுடைய முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக உங்களை மன்னித்துதான் இருக்கின்றார்கள் அந்த மன்னிப்பையே இப்போது உங்களுக்குத் தருகிறோம். இனிநாம் அனைவரும் சேர்ந்து அனைத்து தலித் உரிமைக்காக மக்களின் விடுதலைக்காக உழைப்போம். வாருங்கள்.

3. மூன்றாம் பாவ அறிக்கை
உங்களை குறையுள்ளவர்களாகவும் சகோதரிகளே கடவுள் இருபாலரையும் அவருடைய சாயலில் படைத்திருக்கின்றார். ஆனால் இந்த உண்மையை நாங்கள் மறுதலித்து வாழ்ந்தமைக்காக மனம் வருந்தி உங்களிடம் மன்னிப்பு கேட்கின்றோம். ஆண்களுக்காகவேப் படைக்கப்பட்டவர்களாகக் கருதி வாழ்ந்த வாழ்விற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்கின்றோம். இனிமேல் உங்களுக்குரிய மதிப்பை தந்து சமமாக ஏற்போம். எங்களை மன்னித்து ஏற்றுக்கொள்வீர்களாக.

மக்கள் பாவ மன்னிப்பு வழங்குதல்
நாங்கள் இத்தனை ஆண்டுகாலமாக உங்களை மன்னித்துதான் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இப்போதும் உங்கள் மனம்திருந்துதலில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இருந்தாலும் கடவுள் முன்பாகவும், மக்கள் முன்பாகவும் அறிக்கையிட்ட படியினால் உங்களை மன்னிக்கிறோம். நாம் அனைவரும் சேர்ந்து பெண்களின் வாழ்வுரிமைக்காக தொடர்ந்து போராட உறுதிகொள்வோம்.

அமைதி

4. நான்காவது பாவ அறிக்கை
எங்களின் சகோதர சகோதரிகளே பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும், அதனால் பயன்பெறுவதை நியாயம் என்றும் இதுவே கடவுள் அருள் என்று எண்ணி வாழ்கின்றோம். இதனால் உங்கள் வாழ்வு பாதிக்கிறது என்பதை ஏற்க மறுக்கின்றோம். உங்களின் இந்த நிலைக்கு நாங்களும் ஒரு மறைமுகக் காரணம் உங்களைப்போல என்பதை உணருகின்றோம். ஊதியக்குறைவான ஏழைகளின் உழைப்பால்தான் எங்களின் வாழ்வு வளமாய் இருக்கிறது என்பதை ஏற்க மறுக்கின்றோம். எங்களை மன்னியுங்கள்

மக்கள் பாவ மன்னிப்பு வழங்குதல்
சகோதர சகோரரிகளே உங்களின் இந்த மனமாற்றம் எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. பணக்காரார்கள் இறையரசில் சேர்வது அரிது என்ற இயேசுவின் நிலைப்பாட்டை நினைவுகூர்ந்து மனம் திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைகொடுங்கள். ஆடம்பர வாழ்வைத் துறந்து எளிய வாழ்க்கை மேற்கொண்டு பகிர்ந்து வாழ கற்றுக்கொள்ளுங்கள். பொருளாதார ஒடுக்குதலை நியாயப்படுத்தும் எல்லா அமைப்புகளையும் தகர்த்தெறிய எங்களுடன் பாடுபடுங்கள்.

அமைதி

9. திருப்பணிக்கொடை சிறப்புப் பாடல்

10. திருவிருந்து:
நடத்துநர்: எல்லாம் வல்ல கடவுளே அனைத்தையும் படைத்தவரே உம்மைப்போற்றுகின்றோம்.

மக்கள்: படைப்பின் வளங்களுக்காக உழைக்க வாய்ப்பளிக்கும் பகலுக்காக ஓய்ந்து புதுப்பிக்கும் இரவிற்காக கடவுளே உம்மைப் போற்றுகின்றோம்.

நடத்துநர்: உயிர் மூச்சான காற்றுக்காக உயிர்காக்கும் நீருக்காக தன் வளத்தை உவந்தளிக்கும் நிலத்துக்காக கடவுளே உம்மைப் போற்றுகின்றோம்.

மக்கள்: தான் செத்து மடிந்து எங்களுக்கு உணவாகும் விதைக்காக, வித்து அறுத்து சேகரித்து உணவை உருவாக்கும் மனித உழைப்பிற்காக கடவுளே உம்மைப் போற்றுகின்றேம்.

நடத்துநர்: கடவுளே எங்கள் தாயும் தந்தையுமானவரே எங்களுக்கு உணவளித்து பராமரிப்பவரே உம்மைப் போற்றுகின்றோம்.

மக்கள்: பகிர்ந்துண்டு நலமுற்று கூடி வாழும் சிந்தையைக் கொடுத்த கடவுளே உம்மைப் போற்றுகின்றோம்.

நடத்துநர்: நாங்களோ , சுயநலம் பேணுவதில் அக்கறை உடையவர்களாகவும் கூடிவாழ்வதற்கு பதிலாக சிதறடிப்பவர்களாகவும் மாறிவிட்டோம். 

மக்கள்: கடவுளே எங்களை இழிநியிைல் நீர் விடவில்லை. எங்களைக் கூட்டி ஒன்றுபடுத்தவும், புதுவாழ்வு அளிக்கவும் மனுமைந்தராகிய இயேசுவை தந்தீரே உம்மைப் போற்றுகின்றோம்.

நடத்துநர்: வானத்திலிருந்து இறங்கிய விண்ணக உணவு அவரே அவர் நமக்காக உடைக்கப்பட்டார். அதனால் நமக்கு புது வாழ்வு உண்டு உம்மைப்போற்றுகின்றோம்.

மக்கள்: சாதி, மத, பொருளாதார அரசியல் ஆணாதிக்கங்களால் இழிவுபடுத்தி நிற்கும் மக்களிடத்தில் கடவுள் இன்றும் இருக்கின்றார். அவரை அன்றும் இன்றும் கொல்பவர்கள் இத்தகைய ஆதிக்க வர்க்கத்தினரே என்று அறிகின்றோம். ஆயினும் எங்களை ஒடுக்குகின்ற மக்களுள் உள்ளுறை ஆவியர் அவர்களை மன்னித்துவிட்டார். நாங்களும் ஒருவரோடு ஒருவர் ஒப்புரவாகி புதுவாழ்வுப் பெற்றுவிட்டோம். உம்மைப் போற்றுகின்றோம்.

நடத்துநர்: கடவுளின் எல்லையற்ற அன்பிற்கு நன்றி. இந்த நினைவுகூருதலால் நன்றி உணர்வால் கடவுளின் அன்பு நம்மை மீட்கிறது. மரித்த கிறிஸ்து உயிர் பெற்றார். அல்லேலுயா. ஒடுக்கப்படும் அனைவரும் விடுதலையைக் காண்பர். ஓங்குக இறைப்புகழ், நிறைவுறுக இறையரசு.

மக்கள்: இந்த நினைவில் நாம் இந்த உணவை பகிர்ந்து ஏற்கின்றோம். இது நமக்கு திருவிருந்தாகிறது.

நடத்துநர்: எனவே நாம் பிட்கிற இந்த அப்பம் உடைக்கப்பட்டு பகிரப்படும் இயேசுவின் சதையாகவும், அவருடன் சேர்ந்து அனுதினமும் கொல்லப்படும் மக்களின் சதையாகவும் எல்லோருக்கும் வாழ்வளிக்கும் உணவாகிறது.

நாம் படைத்துள்ள இந்த திராட்சை ரசம் அவரின் உதிரமாகவும் உழைப்பாளிகளின் உதிரமாகவும் எல்லோருக்கும் உயிரூட்டும் பானமுமாகின்றது.

மக்கள்: கடவுளே வானத்திலிருந்து இறங்கிய வாழ்வளிக்கும் உணவே, உம்மை நன்றியோடு ஏற்கின்றோம். நாங்களும் எளியோருக்கென்று பிட்கப்படவும், பகிரப்படவும் எங்களை அர்ப்பணிக்கின்றோம்.

11. ஆண்டவர் கற்பித்த இறைவேண்டல்:
பாடல்: வானத்தில வாழுகிற பெத்தவரே சாமி ஒம்

12. இறைவேண்டல்:
என்றென்றும் எங்களோடு இருக்கும் தாயும் தந்தையுமாகிய கடவுளே ஒடுக்குலுக்குட்பட்டவர்கள் விடுவிக்கப்படுவதன் மூலம் உன் பெயர் போற்றப்படுவதாக, எளியோரின் கூட்டாட்சி பூமியில் அமைவதாக, அநீதியான சக்திகள் அகற்றப்பட்டு உம்முடைய நீதி நிலைபெறுவதாக. ஏழைகளுக்கும், பெண்களுக்கும் தலித் மக்களுக்கும் நீர் வழங்கியிருக்கும் மன்னிக்கும் அதிகாரத்திற்காக உமக்கு நன்றி. ஆதிக்க ஆதரவாளர்கள் அனைவரும் மனம் திரும்பி மன்னிப்பில் திளைக்க அருள்தாரும். எளியோருக்கு தடைக்கல்லாய் இருக்கும் சக்திகளின் யுக்திகளிலிருந்து அவர்களை விடுவித்தருளும், ஓங்குக இறைப்புகழ், நிறைவுறுக இறையரசு.

13. ஒப்படைப்பு:
வழிபாட்டிற்கு ஆதிக்கத்தால் வந்தபொழுது ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும் பாதிக்கப்பட்டவர்களாகவும் பிளவுபட்ட நிலையில் பங்கேற்றோம். இவ்வழிபாட்டில் பங்கேற்றதன் மூலம் எங்கள் பிரிவினைகளை உணர்ந்து மனந்திருந்தி கிறிஸ்து இயேசுவுக்குள் சகோதர சகோதரிகளாக சமத்துவ உணர்வில் பணிகளைச் ஒன்றான நிறைந்திருக்கிறோம் என்ற உணர்வில் இருக்கின்றோம். இத்தகைய உணர்வின் அடிப்படையில் எங்களுடைய அன்றாட செய்வதற்கு செல்கின்றோம். இவ்வழிபாட்டில் நாங்கள் ஏற்றுக்கொண்ட புதிய உணர்வுகளுடன் வாழவும் அன்பு நீதி, அமைதி சமத்துவம் என்ற தகவுகளின் அடிப்படையில் கடவுளின் புதிய மானுடத்தை உருவாக்க நாங்கள் முயலுவோம் என்று உறுதியளிக்கின்றோம். இத்தகைய உறுதியில் நாங்கள் நிலைத்திருக்கவும் எந்தத் தடைகள் வந்தாலும் அதை எதிர்த்து துணிந்து செயல்படவும் கடவுளே உம்முடைய ஆற்றலையும் அருளையும் தாரும்.

14. இறையாசி பகிர்ந்துக்கிறது
பெத்தவராம் சாமியால வரும் / ஒடம்பொறப்பு ஒறவும் அன்பும் /உத்தமரேசு தந்த / ஒரு ஓலை விருந்தான அருளும்/சுத்தராம் ஆவியார் தரும்/ ஒத்துமையும் அறிவும் நித்தநித்தம் /நம்மை எல்லாரோடுங்கூட / நிலவிட வேணுமே/ஆமென்.

15. மங்கலப்பாடல். கீர்த்தனை பாடல் எண் 77
சீர் ஏசுநாதனுக்கு ஜெயமங்கலம்

அடிக்குறிப்பு
வழிபடுவோம் (தலித் வழிபாட்டு முறைகள்) தமிழ்நாடு இறையில் கல்லூரி நூலைப் பின்பற்றியது)

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.