தமிழ்நாடு இறையியல் கல்லூரி
அரசரடி, மதுரை-16
பொங்கல் வழிபாடு-2026
நாள்: 14.01.2026
நேரம்: காலை 8.00 மணி
இடம்: கல்லூரி அரங்கம்
தேவியல் இளையர் நான்காமாண்டு
1. வாழ்த்தும் வரவேற்பும் (Greeting & Welcome)
அன்பும் அருளும் பொங்கிட, அறமும் வளமும் தழைத்திட, இல்லமும் உள்ளமும் பொங்க, இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களோடு பொங்கல் வழிபாட்டிற்கு வந்திருக்கின்ற உங்கள் யாவரையும் மூவொரு கடவுளின் திருப்பெயராலே அன்போடு வாழ்த்தி வரவேற்கின்றோம்.
2. வழிபட அழைப்பு (Call To Worship)
இசை - இசைக்கப்படும்...
"அவரே விண்ணையும் மண்ணையும் கடலையும் அவற்றிலுள்ள யாவற்றையும் உருவாக்கியவர் என்றென்றும் நம்பிக்கைக்கு உரியவராய் இருப்பவரும் அவரே, ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார். பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார் சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார்" (திருப்பாடல்கள் 146:6,7)
அனைவரையும் பண்படுத்தி பாதுகாக்கின்ற கடவுளை மகிழ்ச்சி நிறைந்த இத்திருநாளில் நாம் ஒன்றிணைந்து வழிபடுவோம் வாருங்கள்
3. தொடக்க இறைவேண்டல் (Opening prayer)
"நீதியை நீங்கள் விதைத்துக் கொள்ளுங்கள். அன்பின் கனியை அறுவடை செய்யுங்கள் உங்கள் தரிசு நிலத்தை உழுது பண்படுத்துங்கள் என்று வாக்குரைத்த படைப்பாளராம் கடவுளே. தமிழர் திருநாளாம் இன்றைய தினத்தில் படைப்புகள் அனைத்தோடும் உம்மை வழிபடுவதற்கு நீர் அருளிய புதிய நாளுக்காக நன்றி செலுத்துகிறோம். நீர் படைத்த இந்த உலகில் படைப்பு தன் பணியை செய்ய இயற்கைக்கும் உழவர் பெருமக்களுக்கும். நாங்கள் இவ்வழிபாட்டில் இணைந்து நன்றி செலுத்தவும் அவர்களை நினைவு கூறவும் எங்களுக்கு அருள் தாரும். படைப்புக்கும் எங்களுக்கும் உள்ள தொடர்பை இன்னும் அதிகமாய் புதுப்பித்துக் கொள்ள எங்களுக்கு உதவி செய்யும். வழிபாட்டின் தொடக்க முதல் நிறைவு மட்டும் உம்முடைய அருளையும் ஆசியையும் ஆற்றலையும் பெற்றுக்கொள்ள நீர் எங்களை தகுதிப்படுத்த வேண்டுகிறோம். இவை . அனைத்தையும் என்னில் நிலைத்திருப்பவர் மிகுந்த கனிகளை கொடுப்பர் என்று சொன்ன இயேசு கிறிஸ்துவின் வழியாய் வேண்டிக் கொள்கிறோம். எங்கள் படைப்பாளராகிய நல்ல கடவுளே ஆமென்.
3. மூவொரு கடவுளைப் போற்றுதல்
தந்தையாம் கடவுளே.
விதையையும், மழையையும் சூரியனையும் அளித்து
நிலத்தைப் பலன் தரச் செய்தீர்.
எங்கள் உழைப்பை ஆசீ செய்து
பசியைத் தணிக்கும் கடவுளாக இருப்பதற்காக
உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
மைந்தராம் இயேசு கிறிஸ்துவே,
பசித்தோருக்குத் தானியமாய்,
வாழ்வுக்குத் தம் உயிரை ஒப்படைத்தீர்
எங்கள் அறுவடையை
நீதியும் பகிர்வும் நிறைந்ததாக மாற்றுவீராக.
தூய ஆவியானவரே.
வறண்ட நிலத்தில் உயிரூட்டும் காற்றாய்.
எங்கள் உள்ளங்களில் நம்பிக்கையை விதைத்து.
நீதியின் கனிகளை விளையச் செய்க.
எங்கள் சமுதாயத்தை புதுப்பிப்பீராக.
மூவொரு கடவுளே,
இந்தப் பொங்கல் நாளில்
நன்றியுடனும் ஒப்படைப்புடனும்
உம்மைப் போற்றுகிறோம். ஆமென்.
4. தொடக்கப் பாடல் (Opening song)
பூமியில் வாழுற மக்களே எல்லோரும்
கூடியே வாருங்க கும்பிடலாம்
ஆரவாரத்தோட ஆனந்தமா பாட
ஆண்டவர் திருமுன் சேர்ந்திடலாம்
1. கடவுள் ஒருவரே நமக்குத் தெய்வங்க - அவர
விட்டாலுலகில் துணைவர் பாருமில்லீங்க
என்றென்றும் அவரு, எங்கள் தலைவரு
என்றே சத்தம் போட்டு கெம்பீரமா பாட (பூமியில்)
2. கடவுள்தானே நம்மப் படைச்ச தாய் தந்த - நல்ல
இடையரவரு நாம் அவருடைய ஆட்டு மந்த
கையாலும் நெஞ்சாலும் என்னத்த செஞ்சாலும்
தெய்வத்தை நம்மால செஞ்சிட லாகுமா (பூமியில்)
3. கடவுள் ரொம்ப நல்லவரு ஆமா நல்லவரு
கடலைப்போல ரொம்பவும் இரக்கம் உள்ளவரு
உள்ளவரும் அவர் நல்லவரும் அவர்
உள்ளே வாங்க பாட ஒத்துமையா கூட (பூமியில்)
- ஜே.தி.அ.
5. பிழை உணர அழைப்பு (Call to Confession)
நாம் கடவுளின் கைவேலைப்பாடு. நற்செயல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கிறோம். அவ்வாறு நற்செயல்கள் புரிந்து வாழும்படி கடவுள் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கிறார். (எபேசியர்:2:10) என்ற திருமொழியை மறந்து இயற்கையை சீரழித்து வருகின்ற செயல்களை எண்ணி மனம் வருந்தி ஆண்டவர் முன்னிலையில் நம் பிழைகளை அறிக்கை செய்வோம் வாருங்கள்.
5. பிழை உணர அழைப்பு (Realization of sins)
1. பண்படுத்து, பாதுகாத்திடு என்ற கடவுளின் கட்டளையை மீறி, பாதுகாக்கப்படவேண்டிய நிலங்களையும், இயற்கை வளங்களையும் எங்களின் பேராசையினால் சுரண்டினோம். எங்களுடைய கீழ்ப்படியாமையை எண்ணி வருந்துகின்றோம். எங்களை பொருத்தருள வேண்டுகிறோம்.
2. விளைச்சல் நிலங்களில் இயற்கைக்கு எதிராக செயற்கை உரம் போட்டு பயிர்களையும் உயிரினங்களையும் நாசம் செய்தோம், இத்தகைய பாவசெயல்களை எண்ணி மனம் வருந்துகிறோம். எங்களை பொருத்தருள வேண்டுகிறோம்.
3. இரக்கமுள்ள கடவுளே! உழைப்பையும், உழவர்களையும் நீர் மதிக்கின்றீர். ஆனால் நாங்களோ தேவைக்கேற்ற உற்பத்தியை கைவிட்டு பணப்பயிர்களை பயிரிடுவதும், உயிரி தொழில்நுட்பத்தை மேற்கொள்வதும் போன்ற தீச்செயல்களை செய்கின்றோம். எங்கள் இழிநிலையை எண்ணி மனம் வருந்துகிறோம். எங்களை பொருத்தருள வேண்டுகிறோம்.
4. விளைச்சல் நிலங்களை அடுக்குமாடிகள் கட்டவும், தொழிற்சாலைகள் அமைக்கவும், பொறுப்பின்றி பாழ்படுத்துகின்றோம். எங்கள் இழிநிலையை எண்ணி வருந்துகிறோம். எங்களை பொருத்தருள வேண்டுகிறோம். மனம்
(நாம் நம்முடைய தனிப்பட்ட பிழைகளை அறிக்கை செய்வோம்)
6. பிழை மன்னிப்பின் உறுதி (Absolution)
சுயநலம் சாராது பொது நலத்துடன் வாழ்ந்து நீதி, அமைதி, சம உரிமை போன்றவைகளுக்கு நேராக நம்மை வழிநடத்தும் கடவுளிடம் நம் பிழைகளை உண்மையாய் அறிக்கை செய்த ஒவ்வொருவருக்கும் பிழைகளை மன்னித்து நிலை வாழ்வில் நம்மை சேர்ப்பராக. ஆமென்.
7. திருமறைப் பாடங்கள் (Scripture reading)
1. இணைச்சட்டம் 8:7-18
Deuteronomy 8:7-18
2. கலாத்தியர் 6:6-10
Galatians 6:6-10
3. தூய மத்தேயு 13:1-9
St. Matthew 13: 1-9
8. சிறப்பு நிகழ்வு (Special Event)
சிறப்பு பாடல்
9. அருளுரை (Sermon)
நாடக வடிவில்
10. திருத்தூதுவர் பற்றுறுதி அறிக்கை - தழுவியது (Affirmation faith)
மக்களுக்கு வாழ்வளிக்க விண்ணையும் மண்ணையும் அருட்கொடையாக படைத்த அனைத்து ஆற்றலும் பொருந்திய கடவுளை நம்புகிறோம். இயற்கை வளங்களையும் இறை ஆளுகையும் ஒன்றிணைத்த உன் திருமகன் இயேசு கிறிஸ்துவையும் நம்புகிறோம் அவர் தூய ஆவியாராலே கன்னி மரியாவிடம் கரு கொண்டு பிறந்தார். ஏழை எளிய மக்களின் வாழ்வுக்காக உழைத்ததால் பொந்து பிலாத்து காலத்தில் பாடுபட்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டார் விதையாக பாதாளத்தில் இறங்கி மக்களின் நல்வாழ்வுக்காக மூன்றாம் நாள் மாபெரும் தளிராக உயிர்த்தெழுந்தார். ஏழை எளிய மக்களின் வாழ்வு உயரவும் உழைப்பவர்கள் ஊக்கம் பெறவும் உழைக்கும் மக்கள் பக்கம் இருக்கும் கடவுளின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து உழைக்கும் மக்கள் அனைவருக்கும் வாழ்வளிக்க மீண்டும் வருவார். இயற்கையை பாதுகாக்கும் தூய ஆவியாரை நம்புகிறோம். உழைப்பவர்களை முக்கியத்துவப்படுத்தும் திருச்சபையும் உழைப்பவர்களின் கூட்டுறவும். இயற்கைக்கு எதிராக செய்யும் பிழைகளுக்கான மன்னிப்பும், அனைவருக்கும் மறுவாழ்வு உண்டு என்றும் நம்புகிறோம்.
11. நன்றியும் மன்றாட்டும் (Thanks Giving and Intercessory)
நன்றி செலுத்துவோம்
1. வழிநடத்தும் அன்பின் கடவுளே! நீர் கொடுத்த புதிய நாளுக்காக வாழ்விற்காக, ஆற்றலுக்காக, உமக்கு நன்றி படைக்கின்றோம். நாங்கள் அனைவரும் ஒரு மனதுடன் கூடி வந்து உம்மைத் தொழுது கொள்வதற்கும், எங்களைப் புதுப்பித்துக்கொள்வதற்கும் நீர் கொடுத்த வாய்ப்பிற்காகவும் நல்ல வழிபாட்டு சூழலுக்காகவும் உமக்கு நன்றி படைக்கின்றோம்.
2. படைப்பை மனுகுலத்திற்கு ஈவாய் அளித்த எங்கள் இறைவரே! நீர் கொடுத்த இயற்கை சூழலுக்காக உமக்கு நன்றி செலுத்துகின்றோம். இந்த உழவர் திருநாளில் வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமை உணர்வோடு உழவர்களோடு எங்களையும் அடையாளப்படுத்திக் கொள்வதற்கு கொடுத்த வாய்ப்புக்காக நன்றி செலுத்துகின்றோம். உழவு தொழில் சிறக்க கொடுத்து வருகின்ற பருவ மழைக்காகவும் கால சூழ்நிலைகளுக்காகவும் உமக்கு நன்றி படைக்கின்றோம்
3. பாதுகாக்கும் கடவுளே! படைப்பும் உம்முடைய சாயல் என்பதை உணர்ந்து தங்கள் வாழ்க்கையை இயற்கைக்காக ஒப்படைத்து இயற்கையோடு வாழ்ந்து அவற்றை பாதுகாக்கும் தன்னார்வலர்களுக்காகவும் சமுதாய செயல்பாட்டார்களுக்காகவும் அவர்களின் வாயிலாக நாங்கள் பெற்று வருகின்ற கற்றல்களுக்காகவும் உமக்கு! நன்றி படைக்கின்றோம்.
4. "உழவில்லையேல் உணவு இல்லை" என்ற முதுமொழிக்கு ஏற்ப உழவுத் தொழில் செய்கின்ற உழவர்களுக்காகவும், நாம் உண்ணுகின்ற உணவிற்காகவும், உறவுகளுக்காகவும், கால்நடைகளுக்காகவும் உமக்கு நன்றி செலுத்துகின்றோம். உழவர்களுடைய வாழ்வு சிறக்க நம் நாட்டு அரசு எடுத்து வருகின்ற முன்னெடுப்புகளுக்காகவும் படைக்கின்றோம். நலத்திட்டங்களுக்காகவும் உமக்கு நன்றி
மன்றாடுவோம்
1. எம்மைப் படைத்து பராமரிக்கும் அன்பின் இறைவா! நீர் எங்களுக்கு கொடையாக தந்த இயற்கைக்காகவும், அதன் பலன்களுக்காகவும் இந்த வளமிக்க இயற்கையை நாங்கள் பாதுகாத்து எம் பின்வரும் சந்ததியினரும் அதன் பலன்களை பெறும் வண்ணம் வாழ்ந்திட உம் அருள் வேண்டி இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்.
2. சேற்றில் பதித்து, வெயில் மழை பாராமல் எப்போதும் விளைநிலங்களில் பணிபுரியும் எமது விவசாய நண்பர்களுக்காக மன்றாடுகிறோம். தங்களின் உடல் உழைப்பின் பலனை நிறைவாகப் பெற்று, பஞ்சம், நோய் போன்ற எல்லா தீமைகளிலிருந்தும் விடுதலை பெற்று நிறைவோடு வாழ வரமருள இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்.
3. விவசாய வளமிக்க எம் நாட்டை ஆளும் அதிகார வர்க்கத்தினருக்காக மன்றாடுகிறோம். தங்கள் சுயநலத்தை மறந்து ஏழை, எளிய விவசாய பெருமக்களின் வாழ்வு, வளம் பெற விவசாய தொழில் சிறக்க சட்ட திட்டங்களை இயற்றி செயல்படுத்தும் மனதிறனை அவர்களுக்கு அளித்தருளுமாறு இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்.
4. இந்த பொங்கல் விழா வழிபாட்டில் கலந்து கொள்ளும் நாங்கள் அனைவரும் விவசாய மக்களையும், அவர்களின் உழைப்பையும் மதித்து, சுயநலத்தோடு உணவு பொருட்களை எமக்கென பதுக்காமல், நல்மனத்தோடு அவற்றை இல்லாதவர்களோடு பகிர்ந்து கொள்ளும் தாராள மனத்தை எமக்கு தற்தருளுமாறு இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்.
5. இயற்கை சீற்றம், பொய்த்த பருவ மழை, விவசாய இடு பொருட்களின் விலையேற்றம் உலகமயமான சந்தை பொருளாதாரம் போன்ற தீய சக்திகளின் கோர பிடியில் சிக்கித் தவிக்கும் விவசாயிகள் உமது அருள் துணையோடு நியாயமான தொழில் முறைகளைப் பின்பற்றி உழைக்கவும், அவர்கள் வாழ்வு ஏற்றம் காணவும் இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்.
12. ஆண்டவர் கற்பித்த இறைவேண்டல் (Lord's Prayer)
விண்ணுலகிலிருக்கிற எங்கள் பெற்றவராகிய கடவுளே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக. உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல் மண்ணுலகிலும் நிறைவேறுக. இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளது போல எங்கள் குற்றங்களை மன்னியும். நாங்கள் சோதனைக்கு உட்படும்போது. தீயோனிடமிருந்து எங்களை விடுவியும். ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே.ஆமென்.
13. இறைவாழ்த்து (Benediction)
இயற்கையை பண்படுத்தவும் பாதுகாக்கவும் கற்றுத்தந்த கடவுளின் அன்பும் உழைப்பவர் உள்ளங்களில் ஒளியூட்டும் இயேசு கிறிஸ்துவின் அருளும் உழைப்பவர்களோடு என்றும் துணை நிற்கும் தூய ஆவியாரின் நட்புறவும் என்றும் நம்மோடு நிலைத்திருப்பனவாக.
14. நிறைவுபாடல் (Closing Song)
சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம் - ஆதி
திரி யேசு நாதனுக்கு சுபமங்களம்.
பாரேறு நீதனுக்கு, பரம
பொற்பாதனுக்கு
நேரேறு போதனுக்கு, நித்திய
சங்கீதனுக்கு, - சீர்
1. ஆதி சரு வேசனுக்கு.
ஈசனுக்கு மங்களம்
அகிலப் பிர காசனுக்கு,
நேசனுக்கு மங்களம்
நீதி பரன் பாலனுக்கு.
நித்திய குணாலனுக்கு,
ஓதும் அனுகூலனுக்கு, உயர் மனுவேலனுக்கு, - சீர்
2 மானாபி மானனுக்கு,
வானனுக்கு மங்களம்
வளர் கலைக் கியானனுக்கு,
ஞானனுக்கு மங்களம்
கானான் நல் தேயனுக்குக்
கன்னிமரிசேயனுக்கு.
கோனார் சகாயனுக்குக், கூறு பெத்த
லேயனுக்கு, - சீர்
3 பத்து லட்ச ணத்தனுக்குச்,
சுத்தனுக்கு மங்களம்
பரம பதத்தனுக்கு
நித்தனுக்கு மங்களம்
சத்திய விஸ்தாரனுக்குச்,
சருவாதி காரனுக்கு
பத்தர் உப காரனுக்குப், பரம
குமாரனுக்கு, - சீர்
15. அனுப்புதல் (Sending Out)
நடத்துநர்: ஆண்டவர் உங்களோடு இருந்து உங்களை ஆற்றல்படுத்துவாராக
திருஅவை: அவர் உம்மோடும் இருப்பாராக
நடத்துநர்: கனி கொடுக்கிறவர்களாக உலகத்திற்குள் புறப்பட்டு செல்வோம்
திருஅவை: வாழ்வளிக்கும் கடவுளின் திருப்பெயராலே ஆமென்.










